நாம் தமிழர்கள்…………?
ஒரே மொழிதான்
ஆனாலும்-
நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.
ஒரே ஊர்தான்
ஆனால்-
நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை
ஒரே பண்டிகைதான்
ஆனால்-
நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை
ஒரே மதம்தான்
ஆனால்-
நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை…
நம் இடையினில் இருப்பது
சாதி தோழா.
நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்
கொலை வாளினை எடடா! தமிழா!
மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து………….கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க…………
தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்………என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு…..இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்……தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்….பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்………..
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே
விழி தமிழா!
கலையேவளர்! தொழில் மேவிடு!
கவிதைபுணை தமிழா!
கடலேநிகர் படை சேர்கடு
விடநேர்கரு விகள் சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நீதிநூல்விளை! உயிர் நூல் உரை
நிசநூல் மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம் வானிலும்
அணி மாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவே முரசரைவாய்!
இலையே உண விலையே கதி
இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முர
சறைவாய் முரசறைவாய்!
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
தோழர்களே! ஈழ மக்களின் அவலத்தில் உள்ளம் மிகுந்த ரணமாகியிருக்கிறது. இந்த அவலமான வருத்தமான தருணத்தில் நம் மக்கள் அனைவருமே உண்மையான அக்கறையோடு இருக்கிறார்களா?என்பது சுய ஆய்வுக்குரியது. கொஞ்சம் இந்த இணைப்புகளை பார்க்கவும்.
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா
சுவிஸில் உள்ள இந்து ஆலயங்களில் தாயகமக்கள் அமைதி வேண்டி அமைதிப் பிராத்தனை
வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்
3 லட்சம் மக்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் சூழலில் பிரார்த்தனை போன்ற ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்குமா?
கடைசி நாளில் 10,000 மேற்பட்ட தமிழ்மக்கள் சாக கிடந்த வேளையில் வந்து காப்பாதாத கடவுளை இன்னும் நம்பித்தான் ஆக வேண்டுமா?
மாதாவாகட்டும்,ஏசுவாகட்டும், முருகனாகட்டும், அல்லாவாகட்டும் எவனும் தமிழனத்தின் இக்கட்டான சூழலில் வரவில்லையே………..இன்னும் எதற்கு இந்த பக்தி போதை….நம்பி கெட்டது போதாதா?
பக்தி என்னும் மூடத்தன்த்திற்கு மகுடம் போல, சாதி என்னும் கொடூரம் நம் உள்ளங்களில் உள்ளதே?
ஈழத்தமிழருக்காய் குரல் கொடுக்கும் எத்தனை தமிழர்கள் தங்கள் வீட்டில், வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்கிறார்கள்…..வீட்டில் சாதியை பின்பற்றுபவன் வெளியில் வந்து தமிழன் என்று கத்தினால் கொஞ்சம் நெருடலாகத்தானே இருக்கிறது….
ஈழத்தமிழர்களும் இதில் விதிவிலக்கல்ல, இவ்வளவு ரணங்கள், வலிகள் இருந்தும் சாதியை பின்பற்றுவதில், பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடு திருமணத்திற்கு துணைதேடும் நிலையில் நாமெல்லாம் தமிழர்கள் என்பது கொஞ்சம் போலியாக தோன்றவில்லையா…..?
தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல், பின்பற்றாமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…கடவுள் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டால்தான் நாம் மனிதர்கள்……….
நாம் தமிழராக சாதியை விடுங்கள், மதத்தை துரத்தி அடியுங்கள்…….தமிழில் உரிமை கோரும் மனிதராக உயருங்கள்……
தமிழர்களே திருந்துங்கள்…பெரியாரின் பாதைக்கு திரும்புங்கள்…
பகுத்தறிவுப்பாதை தேர்ந்தெடுங்கள்…………..
தமிழினத்திற்கு ஒவ்வாதது பக்தி…………..தேவை நமக்கு புத்தி………….
நீங்களெல்லாம் மனிதர்களா? உங்கள் சகோதரன் படும் துயரத்தை கேட்டும் அமைதியாக இருக்கும் நீங்கள் மனிதர்களாக இருக்க முடியுமா?
ஆனால் மனிதனின் முகவரி சிரிப்பில் இல்லை கண்ணீரில் இருக்கிறது.“
சக மனிதனின் துன்பத்திற்காகக் கண்ணீர் வடிப்பவனே தன்னை மனிதன் என்று நிரூபித்துக் கொள்கிறான்.
சக மனிதரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வது சமூகப் பண்பாடு.
இன்பத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வருவார்கள் ஏனெனில் அது பயனுள்ளது.
துன்பத்தில் பங்கு கொள்வதுதான் உயர்ந்த பண்பாடு.
புன்னகையில் பங்கு கொள்ள வருபனல்லன், கண்ணீரை பகிர்ந்துகொள்ள வருபவனே உண்மையான நண்பன்.
இந்த உலகம் வாழ்வது விண் மழையால் அல்ல, கண் மழையால்!
மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும். உண்மைதான்.
ஆனால், சக மனிதனின் துயரம் கண்டு சிலர் சிரிக்கிறார்களே அவர்களை மனிதர்கள் என்று சொல்ல முடியுமா?
துன்பத்திலும் பணக்கார துன்பம்,ஏழைத் துன்பம் என்று பேதம் பாராட்டுகிறார்களே!
பணக்காரன் துன்பத்தில் பங்கு கொள்ள வரும் ஏழையின் துன்பத்தை ஏளனம் செய்கிறதே!(வலிந்து ஆதரவு தரும் இந்தியம் பேசும் பொறுக்கி நாய்கள் தமிழர்களை வஞ்சிக்கிறார்களே- மகிழ்நன்)
இந்த மனிதர்கள் எவ்வளவு கொடூரனமானவர்கள்! பிறர் அழுவதை பார்த்து சிரிப்பவர்கள், தாம் சிரிப்பதற்காக பிறரை அழ வைப்பவர்கள், மற்றவர்கள் கண்ணீரை வார்த்து தங்கள் புன்னகைகளை வளர்ப்பவர்கள், இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்.
மலர் தோட்டத்து பூக்களையும்…பனித்துளியையும் பார்த்த கவிஞர் அர்ஷ் மல்ஸியானி இப்படித்தான் எண்ணினார்,
பூக்களும் பனித்துளியும்….புன்னகை கண்ணீரும்…. மலர்த் தோட்டத்தில் மனித நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது.
பனித்துளியின் துக்கத்தை விசாரிக்கப்
பூவனத்தில் யார் இருக்கிறார்கள்?
பாவம்! இந்த ஏழை அழுதால்
– அப்துல் ரகுமானின்
மகரந்த சிறகு நூலிருந்து
தீபாவளி தேவையா?
இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால் நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?
எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?
நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.
பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?
வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?
இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.
இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.
ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? –
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10 கோடியும் அனாவசியமாய் – துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?
தந்தைபெரியார் – ‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931
தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு
வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.
சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.
நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும். அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.
இது பழைய போராட்டமே
இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும். எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.
இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.
இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத – மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.
இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்., நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும், நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.
இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும். உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த
(சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.
கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.
இதுதான் தேவாசுர (சுரர் – அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் – அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.
ராட்சதர்கள் யார்?
புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.
புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன. அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்!
அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.
இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி – கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின்றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.
எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.
தீபாவளி
இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில், நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் – இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் – சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி – நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).
இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவியாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை! அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.
இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?
நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் – நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம். ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் – தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.
ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
(சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை – “விடுதலை” 7.11.1963
)
பெரியார்!
1.வாழ்நாள்:
————
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400
2.சுற்றுப்பயணம்:
—————–
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும்
உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.
3.கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
—————————-
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
————————-
மணிகள் :…….21,400
நாள்கணக்கில்:….891
நிமிடங்களில்:…..12,84,000
வினாடிகளில்:…..77,04,000
சிறப்புக்குறிப்பு:
————-
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது
2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே
இருக்கும்.
பகுத்தறிவு,ஒழுக்கம், தியாகம், பொது நன்மை, பொது நோக்கு.எல்லாமே வெங்காயங்கள்தாம்! அ மார்க்ஸ்
பெருங்கதையாதடல் எதையுமே பெரியார் உருவாக்கவில்லை என எப்படி சொல்வது, பகுத்தறிவு என்ற பெருங்கதையாடலை அவர் முன் வைக்கவில்லையா? என்ற கேள்வி எழலாம்.
” பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.” (ஆனைமுத்து தொகுப்பு பக்: 129(௧௨௯))
என்று பகுத்தறிவின் புகழ் பாடியவர் அவர். பகுத்தறிவாளர் கழகங்களை அமைப்பது திராவிட கழக செயல்பாடிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், மதத்தின் ஆட்சி என்பதற்கு பதிலாக பகுத்தறிவுப் பார்வை என்ற அளவில்தான் அவரது சொல்லாடல்கள் அமைந்தன.
தமை காட்டுமிராண்டிமொழி என அவர் சொன்னதுகூட இந்த பொருளில்தான் மதத்திலிருந்து பிரிக்கபடாதது என்கிற வகையில் தமிழ், பகுத்தறிவில் தாழ்ந்த நிலையில் உள்ளது.எனவே அது காட்டுமிராண்டி மொழி அவ்வளவுதான்.
எல்லா பிரச்சனைகளுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுங்களுக்குமான முரணற்ற தீர்வாக அவர் பகுத்தறிவு உட்பட எதையும் முன்வைக்கவில்லை. முற்றுண்மையான வரையறைகளை உருவாக்குதல், முழுமையான கோட்பாடு உருவாக்கங்களைச் செய்தல் என்பதற்கு அவர் தொடர்ச்சியாக எதிராகவே இருந்தார். அவர கட்ட விழிப்பிற்கு பகுத்தறிவும் தப்பவில்லை. பகுத்தறிவு மற்றும் மனித ஜீவிகள் குறித்த அவரது கீழ்க்கண்ட மதிப்பீடுகள் இதனை தெளிவாக்கும்.
” ஆகாரம் நித்திரை, ஆண்-பெண் சேர்க்கை ஆகீய தேவைகளில் மற்ற ஜீவன்கலிடம் உல்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன. இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களிடையே அதிகமாகவும் காணப்படுகின்றன. அதிருப்தி என்ற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாக இருக்கிறது. வேலை என்ற கெட்ட குணமும் மனிதனுக்கே அதிகமாக உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதை கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணமும் மனித ஜீவனிடத்திலே அதிகமாக இருந்து வருகின்றது. தனக்கு புரியாததையும் நம்புதல், பேசுதல், நம்பச் செய்தல் முதலிய மூடதன்மை குணம் மனித ஜீவனிடத்திலே அதிகமாய் இருந்த்த் வருகிறது… இது போன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனித ஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடையதாகவே இருக்கிறது ஆகையால் பகுத்தறிவின் மேன்மையால் மனித ஜீவன் சிறந்தத் என்று எப்படி கூற முடியும்.” (ஆனைமுத்து தொகுப்பு பக்: 1132-33 )
என்று கேட்பவர் மற்றோரிடத்தில்,
தன்பிள்ளை , குட்டி, பேத்து பிதிர் ஆகிய சந்ததிகளை பற்றிய முட்டாள்தன்மான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குதான் இருக்கிறதேயொழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை….பகுத்தறிவில்லாத எந்த உயிரும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை; தன் இனத்தை கீழ்மைபடுத்தி வாழ்வதில்லை; தன் இனத்தில் உழைப்பிலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைபடுத்துகிறான். வாகனமாய் பயன்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து தன் இனத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் , பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து வாழ்கிறான்.
எடுத்துக்காட்டுக்கு நாய், கழுதை,பன்றி என்கிற இழிவான மிருகக்கூட்டத்தில் பார்ப்பன சாதி, பறைசாதி, நாயுடுசாதி, முதலிசாதி என்கிற பிரிவுகள் கிடையா. ஆனால் மனித வர்க்கத்தில்தான் தன் இனத்தையே பிரித்து இழிவுப்படுத்துகிறான்
மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான், மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்கிறான், மனிதன் மனிதன் வஞ்சிக்கிறான், பகுத்தறிவின் பயன் இதுவாக இருக்கும்பொழுது மனிதன் நேர்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்” ஆனைமுத்து தொகுப்பு பக்:1115)என்று வினவுகிறார்.
மனித ஏற்றத் தாழ்வுகள் பகுத்தறிவின் மூலமே நியாயப்படுத்தப்படுகின்றன. பகுத்தறிவின் ஆட்சி நடைபெறுகிற மேலை நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல, வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளையும், அதிகாரங்களைடும், சுரண்டல்களையும் நியாயப்படுத்துகிற காரியத்தை அறிவும், தர்க்கமும் சிறப்பாகவே செய்து வருகின்றன. அறிவின் வன்முறையைப் பெரியார் விளங்காதவரல்லர்.
-பெரியார்? அ.மார்க்ஸ் நூலிருந்து
வெளியீடு: பயணி வெளியீட்டகம், 6/114வது குறுக்குத்தெரு, வெள்ளாளத் தேனாம்பேட்டை, சென்னை-86. செல்:(9445124576)
வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சாஸ்திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களல்ல! – பெரியார்
குடிஅரசு 1927, போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு
அக்கிராசனப் பிரசங்கம்சகோதரிகளே! சகோதரர்களே!இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப்பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக்கிறேன்.
என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷகாலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11வது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷ கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்ல வருகிறேன்.தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும் அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதிற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு அத்தொழிலை தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப்பேசுவதும், தீர்மானப்பதும் தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும் தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ, தேசம் முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியையடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.
முதலாவது நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாயிருக்கிறதென்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தன்மையையும் சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத்துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையோ யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத் தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள்.
அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவைதான் காணப்படுகிறது. எனவே,இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும் தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும் மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர் களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும். ஆகவே, அந்த முதலாவது ஆரம்பாசிரியர்களின் யோக்கியதை இப்படியாய் விட்டது.
அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்பாசிரியர்களாகிய உங்கள் யோக்கியதையோ, உங்கள் வயிற்றுப்பாட்டுக்கே கான்பரன்° கூட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப்போகிற பிள்ளைகள் எப்படித்தக்க யோக்கியதை அடைய முடியும். கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமல்ல. அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால மக்கள் சுயமரியாதையோடும் சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
இவைகளை அறிந்தே வள்ளுவரும் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும், கல்லாதார் அறிவில்லாதார் “என்றும்”, “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்றும், “ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக்கூடும். இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திரும்பி அடித்துவிடுவான். ஒருவனை வைதால் அவன் திரும்பி வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும் நாயும் பூனையும் கண்ணில் படும்போதே கால எவ்வளவென்பதும் வாலுண்டென்பதும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும் மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்ராயம்.
நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்று கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல. உங்களைவிடப் பெரிய சகலகலாவல்லபர்களிடத்தில் ஏம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்களை பெற்ற பையன்களும், ஒரு காபிக்கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு “சாமி ஒரு கப் காப்பி கொண்டு வா என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான்.
இந்த பட்டம் எல்லாம் கல்வியாகுமா? இதை பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாவார்களா? வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்கிறார்களோ அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திரப் பாடம் தெரியாதோ அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளம் தெரியாதோ அப்படியே எம்.ஏ. படித்தவனுக்கு பிறருக்கு க்ஷவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும், வேத வியாக்கினங்களும் தெரியாதோ அப்படியே வித்வான்களுக்கும், சா°திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சா°திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர், உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர அறிவாகாது.
இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்ககளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரியாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம.
எனவே இதுகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்விமுறையென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பைகளுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதத்தில் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்?
முன் காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டுவாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண் ஜாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத் தான் வீதிப்புரம் நடப்பான் என்று என் தகப்பனார் சொல்லியிருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக் கறந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன செய்து விடும் பார்க்கலாம் என்று சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜி°ட்ரேட் கச்சேரி, எத்தனை முன்சீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீ° கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா?
படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஹீனமாக நடக்கத் தூண்டி அல்லல் படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS