மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

காலம் அரித்திடாது எம் இணைப்பை-கி.பி.அரவிந்தன்

01.1987 ஆம் ஆண்டு சிறிலங்கா – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட வேளையில் சில ஈழப்போராளிகள் உட்பட பலரிடமும் அரசியல் தீர்வு பற்றிய ஒரு மயக்கநிலை தோற்றம் பெற்றிருந்தது. ஈழப்போராட்டத்தின் பின்தளமாக இருந்த தமிழ்நாட்டை விட்டு பணியகங்களையும் மூடிவிட்டு ஈழப்போராளிகள் தாயகத்திற்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அப்போது நான் ஈழ நண்பர் கழகத்தின் வெளியீடாக வந்துகொண்டிருந்த நட்புறவுப்பாலம்இதழில் விடைபெறும் நேரம்..என ஒரு கடிதம் எழுதினேன்.

அக்கடிதத்தின் இறுதி வரிகளாக நண்பர்களே இது விடைபெறும் நேரம்தானா என்பது தீர்மானமாகவில்லை. ஆனாலும் எங்கள் நினைவுகள் உங்களின் அன்பு நட்பு தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள்ளோம்.என எழுதி ஓக். 87 என கையெழுத்திட்டிருந்தேன்.

காலம் இருபது ஆண்டுகளைத் தின்று முடித்துவிட்டது. துன்பியல் நிகழ்வுகள் பலவற்றுக்கு நாம் சாட்சியமாகியும் விட்டோம். இப்போதெல்லாம் அன்றைய நாட்களைப்போல் ஊடும்பாவுமாக நாம் வாழ்வதற்கு இந்திய நாட்டின் சட்டங்கள் இடம்கொடுக்குமா எனத் தெரியவில்லை. தற்போது உங்களிடம் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அலைந்து உழன்று கொண்டிருக்கிறேன்.

புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் நானும் ஒரு தலையாக இணைந்துவிட்டேன். ஆனால் என்னுள்ளான நெருப்பை என்றும் நான் அணைய விட்டதுமில்லை, எனக்கான தேசியப் பணிகளைக் கைவிட்டதுமில்லை. அப்பணியாக இக்கட்டுரையையும் எழுதுகின்றேன்.

நண்பர்களே,

எத்தனையோ துயர துன்பியல் நிகழ்வுகளையும் தாண்டி ஈழப்போராட்டம் விரிவுபெற்று சில எல்லைகளைத் தொட்டு நிற்கின்றது. அதேபோல் மரணத்துள்ளான வாழ்வும் மாற்றமின்றித் தொடர்கின்றது. இனப்படுகொலை முன்னெப்போதையும் விட சிறிலங்கா அரசால் சர்வதேச அங்கீகாரத்துடன் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதற்கு காந்தியை மகாத்மாவாகக் கொண்டாடும் உங்கள் தேசமும் உடந்தையாக இருக்கின்றது என்பதற்கு வவுனியா படைத்தளம் சாட்சியமாகி உள்ளது.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற முடிவிலேயே இந்திய தேசம் ஈழத்தமிழர்கள் மீதான தனது நகர்வுகளை மேற்கொள்கின்றது. இந்திய தேசம் அரசியல் இராஐதந்திரத்துடன் நடக்கின்றதா அல்லது வர்ணாச்சிரம தர்மத்தை முன்னிறுத்துகின்றதா என்பதே இன்றைய கேள்வி. இந்தச் சூழலே நாம் விடைபெற முடியாதவர்கள், இன்னும் நெருக்கமாக இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

முன்னெப்போதையும் விட அயல் தேசமான இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தார் தமது கண் காதுகளைச் சின்னஞ்சிறிய இலங்கைத்தீவின் சந்து பொந்துகளில் எல்லாம் விதைத்து வைத்திருக்கின்றனர்.

சர்வதேசம் துயருறும் மக்களுக்காகப் போராடும், சமூத்திற்கு நியாயம் வழங்கும் என்றுதானே நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நான் உங்களுடன் தமிழ்நாட்டில் 1978 முதல் 1988 வரை இருந்த காலத்தில் சர்வதேசத்தைப் புரிந்துகொண்டதைவிடவும் புலம்பெயர்ந்த வாழ்வியலின் பின்னணியில் மிகத் துல்லியமாக அதனைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளது.

எல்லாமும் திருப்பபட்டாயிற்று

வட அத்திலாந்திக் கரைகளுக்கு

கரை தொட்ட தேசங்களுக்கு.

வந்து வந்து சேர்கின்றன பார்

அறுத்தெடுத்த ஈரல் குலைகள்

துடிதுடிக்கும் இதயங்கள்

உருவி எடுக்கப்பட்ட நாடி நரம்புகள்

பதனமான முகங்கள்

கனிமச் சத்தும்

எண்ணெய்க் கொழுப்பும்

ஊறின தேறல்

ருசி என்ற ருசி..

இதுதான் சர்வதேசம். புலம்பெயர்ந்ததனால்தான் இப்படிப் புரிந்து என்னால் கவிதை எழுத முடிந்தது.

சர்வதேசம் விடுதலை அவாவும் சமூகங்களுக்கு தன் நலன்களுக்கு அப்பால் எங்கும் ஒத்தாசை புரிந்ததோ அமைதியை ஏற்படுத்தியதோ தீர்வை வழங்கியதோ கிடையாது. அது கிழக்குத் தீமோராக இருக்கலாம் கொசொவோவாக இருக்கலாம் எல்லா இடத்திலும் தன் நலன்களையே இந்தச் சர்வதேசத்தார் முன்னிறுத்தி உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கனிமச் சத்தும் எண்ணெய்க் கொழுப்பும் ஊறின தேறலுக்காகவே அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சின்னஞ்சிறு தீவில் சர்வதேசத்திற்கு என்ன நலன்கள் இருக்க முடியுமென நீங்கள் சிந்திப்பது நியாயமானதொன்றே. அதுவும் துணைக்கண்டமான இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்பும், பெருமளவான மூலவளமும் இல்லாத இலங்கைத் தீவிற்கு சர்வதேசம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது பலருக்கும் புரியக்கூடியதொன்றல்ல.

இந்தியாவின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் இந்துமாக் கடலிடையேயான இலங்கைத்தீவின் அமைவிடமே அதன் பலமும் பலவீனமுமாகும். அவ்வமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக புவிசார் அரசியலில் சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதே அதன் பலவீனம். அதனாலேயே ஈழப் போராட்டம் நீண்டு செல்ல வேண்டியதாக உள்ளது.

இந்து சமுத்திர நாடுகளின் நிலை, இவ்வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு, தமது சுயாதிபத்தியத்தை இழந்து, அமைதியை இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கின்றது.என 70 ஆம் ஆண்டில் முகிழ்ந்த இளந்தலைமுறையைச் சேர்ந்த இரு அரசியல் அறிஞர்கள் 1987 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூலான இந்து சமூத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்எனும் நூலில் தெரிவித்திருக்கின்றனர்.

அதாவது, ஈழத்தமிழரை அழிக்கும் சிறிலங்கா அரசிற்கு அமெரிக்காவும் ஆதரவு அதேவேளையில் அமெரிக்காவை கிலிகொள்ள வைத்திருக்கும் எதிரியான சீனாவும் ஆதரவு. தமிழ்மொழி பேசும் மக்களை ஒரு மாநிலமாக கொண்டிருக்கும் இந்தியாவும் ஆதரவு. நாள்தோறும் இந்தியா மீது யுத்தப்பிரகடனம் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தானும் ஆதரவு. என்ன வேடிக்கை பாருங்கள். இதில் ஈழப்போராட்டம் எவர் நலனையும் சாந்திருக்காததே சட்டாம்பிள்ளையான சர்வதேசத்திற்கான சிக்கலாகும்.

உலகின் பல்வேறு தேசிய இனச் சிக்கல்களில் சர்வதேசம் புகுந்து விளையாடி அவ்வினங்களின் விடுதலை அவாவை கருவறுத்ததை வெற்றியாகக் கொண்டாடி வருகின்றது. அவர்கள் கருவறுத்ததின் சாட்சியமாக நாம் பாலஸ்தீனத்தைக் கொள்ளலாம். அதன் சோகக்கதையை நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இன்று என்ன நிலையில் உள்ளது பாலஸ்தீனம்?

அதேபோல் ஈழப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதும் அதன் வீரியத்தை மங்கச் செய்து முழங்காலில் இருக்க வைப்பதுமே இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் முயற்சியாகும். சர்வதேசம் வழங்கும் ஆதரவும் துணிச்சலும்தான் சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களை அழிக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இன்றைய ஈழப்போராட்டமானது சிறிலங்காவிற்கு எதிராக மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எதிர்முகம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்நிலையில்தான் உங்கள் அன்பும் நட்பும் தோளணைவும் எமக்குத் தேவையாக இருக்கின்றது.

1983 ஆம் ஆண்டு யூலைப் படுகொலை நிகழ்வுகள் யாராலும் மறக்கக் கூடியதொன்றல்ல. நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆண்டு அதன் 25 ஆம் நினைவாண்டு. 1983 ஆம் ஆண்டு இந்நிகழ்வின் போது நான் உங்களுடன் இருந்தேன். அந்த நிகழ்வு தமிழ்நாட்டில் ஏற்படுத்திய எதிர்வினைகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் பணியகமான பாலன் இல்லம் வந்ததும் அங்கு கட்சியின் பொறுப்பாளர்களான தோழர்கள் பலரைச் சந்தித்து நிலமையை விளக்கியதும் நன்கு நினைவில் இருக்கின்றது.

இடதுசாரிக் கட்சிகளின் மாணவர் அமைப்பினர் (ASFI – SFI) அன்று பலம் பொருந்தியவர்களாக செயல் வேகம் கொண்டவர்களாக இருந்தனர். அவ்வேளையில் சென்னை சட்டக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பாக் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லுரி ஆகியவற்றின் விடுதிகளில் கூட்டங்கள் நடாத்தியதும், அக்கல்லூரிகளின் மாணவப் பிரதிநிதிகளைச் சந்தித்ததும் பின்னர் அவர்கள் எல்லோரும் தெருக்களில் இறங்கி ஊர்வலம் போனதும் ஒரு மக்கள் எழுச்சியாக மாறியதும் அரிய தருணங்கள் அவை.

அக்காலகட்டம் மீள உருவாகின்றதோ என்பதைத்தான் உங்கள் நடவடிக்கைகள் எமக்கு உணர்த்துகின்றன. கட்சிகளுக்கு வெளியேயான தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியும், திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் எமக்காகக் களமிறங்கி குரல் கொடுத்ததைப் பார்த்தபோது 1983 அரிய தருணங்கள்தான் நினைவில் எழுந்தன.

இன்று கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நீங்களும் ஏறத்தாழ அனைத்துக் கட்சியினரையும் இணைத்து நடத்தும் இந்த உண்ணாவிரதமும் அதற்குச் சான்றாக அமைகின்றது. அதுவும் காந்தியைக் குறியீடாக்கி அவரது பிறந்த நாளில் போராட்டத்தை நடாத்துகிறீர்கள். ஈழப்போராட்டமும் காந்திய சிந்தனையிலேயே வளர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

02.

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் 1930 ஆம் ஆண்டினை மையமிட்ட காலகட்டம் கவனத்தில் கொள்ளவேண்டியது ஒன்றாகும். 1948 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரி அரசியல் யாப்புக்கு முன்னரான டொனமூர் சீர்திருத்தம் அக்காலகட்டத்தில்தான் நடைமுறைக்கு வந்திருந்தது.

டொனமூர் சீர்திருத்தத்தின்படி இனவாரி பிரதிநித்துவம் கைவிடப்பட்டு பிரதேசவாரி பிரதிநித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் கல்வி கற்ற உயர்மட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமையை மாற்றி 21 வயதிற்கு மேற்றபட்ட ஆண் – பெண் இருபாலாருக்குமான சர்வசன வாக்குரிமை அறிமுகமானது. டொனமூரின் இந்தச் சீர்திருத்தம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பிரதேசவாரி பிரதிநித்துவம். இதனை எதிர்ப்பதில் யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) முக்கிய பங்காற்றியது.

Srilanka warஇந்த யாழ்ப்பாண இளைஞர் பேரவைத் தலைவர்களாக அறியப்பட்ட ஒறேற்றர் சுப்பிரமணியம், ஹண்டி பேரின்பநாயகம், கு.நேசையா போன்றவர்கள் காந்திய சிந்தனையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். தங்கள் வாழ்வியலில், செயல்பாடுகளில் காந்திய வழிமுறையையே கடைப்பிடித்தனர். அத்தலைவர்கள் தங்கள் காந்தியப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியை இலங்கைக்கு – குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சிறப்பித்தனர்.

1970களில் நான் இளைஞனாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் திரு.கு.நேசையா அவர்களை பொது நிகழ்வுகளில் பல தடவைகளில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. அவ்வேளைகளில் எல்லாம் அவரை நான் வெள்ளைக் கதராடையுடனேயே பார்த்திருக்கிறேன். அவரது ஆடை அவரை ஒரு காந்தியவாதியாகவே எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அவரது பேச்சுகளிலும் காந்தியமே மிகுந்திருந்தது.

1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான சா.ஜே.வே.செல்வநாயகம் ஈழத்துக் காந்தியென்ற அடைமொழியுடன் ஊடகங்களாலும் மக்களாலும் புகழப்பட்டார். சாத்வீக வழியிலான போராட்டத்தையே அவர் அரசியல் வாழ்வில் முன்மொழிந்தார். அதன் வழியையே கடைப்பிடித்தார். தனது தலைமையில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக 1956 ஆம் ஆண்டில் நடாத்திய போராட்டத்தையும், 1961 ஆம் ஆண்டில் நடாத்திய சத்தியாகிரகப் போராட்டத்தையும், சாத்வீகப் போராட்டம் என்ற காந்திய வழிப்போராட்டம் என்றே அறிவித்தார்.

அதில் அவரும் அவரது சகாக்களும் வன்முறையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர் இறக்கும் வரையில் தனது கொள்கை வழிப்போராட்டத்தை அவர் கைவிடவே இல்லை. ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் தனது சாத்வீக நடவடிக்கைகள் எதும் வெற்றியளிக்காத நிலையில் கடவுள்தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்எனக் கூறிச்சென்றார்.

1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக தமிழர்களின் கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கிய திரு.ச.ஞானமூர்த்தி அவர்கள் காந்திய நெறிமுறையிலேயே வாழ்ந்து பணியாற்றினார். ஏறத்தாழ 1930களில் செயல்பட்ட தலைவர்களில் இருந்து ஈழத்துக் காந்தியெனப் புகழப்பட்ட சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் காலமான 1977 வரையில் இலங்கைத்தீவின் அரசியலரங்கில் செயற்பட்ட தமிழர் தலைவர்கள் அனைவரும் காந்திய நடைமுறைகளையே கடைப்பிடித்தனர்.

இன்னும் சிறப்பாக கூறுவதானால் 1987 ஆம் ஆண்டில் சிறிலங்கா – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் நுழையும் வரையில் காந்தியும் காந்திய சிந்தனையும் செல்வாக்கும் நம்பிக்கையும் மிக்கதாகவே இலங்கைத் தமிழர்களிடம் காணப்பட்டது. ஈகைச்சுடர் திலீபன் அந்த நம்பிக்கையிலேயே உண்ணா நோன்பை முன்னெடுத்தான். ஆனால் அவன் இறக்க நேரிட்டது காந்தியின் பிம்பத்தை காந்திய நம்பிக்கையை இலங்கைத் தமிழ் மக்களின் நினைவுகளில் இருந்து உடைத்தெறிய வழிவகுத்து விட்டது என்பதே உண்மையாகும்.

அபயக்கரம் கேட்டோர் மேலே

அகண்ட காலால் மிதிக்கலாச்சா

பஞ்சசீலமும் மறந்து போச்சா

காந்தி கைத்தடி துவக்குமாச்சா..

என ஈழத்துக் கவிஞர்கள் தங்கள் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர்.

1970களில் முகிழ்ந்த புதிய தலைமுறையினரே காந்திய வழியின் போதாமையைக் கவனத்தில் கொண்டு மாற்றுவழிகளைக் கண்டடைந்தனர். அம்மாற்று வழியும் பட்டறிவும்கூட வெளியில் இருந்து யாரும் கற்பித்தவை அல்ல. 1965களின் பின்னால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எழுச்சி பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அதன் பட்டறிவிலும் இருந்தே மாற்றுவழி உருவாக்கம் பெற்றது.

1974 ஆம் ஆண்டில் களப்பலியான பொ.சிவகுமாரன் அம்மாற்று வழியின் முதல் பயணியாவான். மாற்று வழி கண்டறியப்பட்டபோதும் காந்தியம் என்னும் அமைப்பும், அறவழிப்போராட்டக் குழுவும் காந்தியச் சிந்தனையில் செயற்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

03.

1983 ஆம் ஆண்டில் நடந்த இனப்படுகொலைதான் ஈழப்போராட்டத்தின் தொடக்கம் என்னும் கருத்து இன்றும் உங்களில் சிலருக்கு இருக்கின்றதோ என்று ஐயுறுகின்றேன். அண்மையில் இளம் படைப்பாளி சோமீதரனின் இயக்கத்தில் வெளிவந்த எரியும் நினைவுகள் என்னும் ஆவணப்படம் 1981 ஆம் ஆண்டு நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றது. அதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யாழ்பாண நூலகம் எரிக்கப்பட்ட கதையை பேசும் அந்த ஆவணப்படம் அந்த ஆண்டைச் சுற்றியதான வேறு விடயங்களையும் பேசுகின்றது.

1983 ஆம் ஆண்டுக்கு நிகரான வன்கொடுமை இரண்டாண்டுகளுக்கு முன்னர் 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது பற்றி காட்சி விபரணத்துடன் பேசுகின்றது. கட்டாயம் பாருங்கள். அதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்கொடுமை பற்றி நீங்கள் அறியாதிருக்கக்கூடும். தமிழ்நாட்டில் எங்களால் வெளியிடப்பட்ட லங்காராணிநாவல் அந்தக் காலகட்டப் பின்னணியில் விரிகின்றது.

தற்போது அது மூன்றாவது பதிப்பாகத் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியே பின்னுக்குப் பின்னுக்குச் செல்லச்செல்ல இந்த ஈழப்பிரச்சனையின் வேர்களை நீங்கள் நன்கு அறிய முடியும். அப்போதுதான் உங்களால் இவை வெறும் அதிகாரப் பரவலாக்கல் பிரச்சனை அல்லவென உணரமுடியும். ஆதலால் பின்நோக்கிய சில வரலாற்று விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில் காலத்திற்குக் காலம் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட அறிஞர்களைக் கொண்ட குழுக்கள் இலங்கைக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்தன. இதன்படி 1927 ஆம் ஆண்டில் டொனமூர்என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தத்தின்படி, பிரதேசவாரி பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு இனவாரி பிரதிநித்துவம் அறிமுகமானது. அதன்பயனாக 1936 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மந்திரி சபை தனிச் சிங்கள மந்திரிசபையாகபரண் ஜெயதிலகாவால் அமைக்கப்பட்டது.

அப்போது பரண் ஜெயதிலகா கூறிய கூற்று, கடந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கெதிராக வெளியிடப்பட்ட இனவெறிக் கருத்துக்களில் மிகவும் மோசமானதும் முதன்மையானதுமாகும். அவர் இவ்வமைச்சரவை ஏன் அமைக்கப்படுகிறதென்றால் சிறுபான்மையினராகிய உங்களின் (தமிழர்களின்) தயவின்றி எங்களால் (சிங்களவர்களால்) ஆட்சியமைக்க முடியும்; எங்களுக்கும் திறமையுண்டு; உங்களுக்கு உரிமை வேண்டுமானால் எங்களைக் கேட்டுத்தான் பெறவேண்டும் எனக் காட்டுவதற்குத்தானஎனும் கருத்துப்படக் கூறியுள்ளார்.

பின்னாட்களில் சிறிலங்காவின் பல தலைவர்களும் இத்தொனியில் கருத்துரைத்துள்ளனர். அண்மையில் காலமான சிறிலங்காவின் அதிபராக இருந்த டி.பி.விஐயதுங்கா, சந்திரிகா குமாரதுங்கா போன்றவர்கள் இக்கருத்துக்களை மறுவுருவாக்கம் செய்துள்ளனர். கடந்த வாரத்தில் சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் அவற்றைப் பின்பற்றி திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.

இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற பத்து மாதத்திற்குள் 19.11.1948 ஆம் ஆண்டில் பெரும்பான்மை அரசால் (சிறிலங்கா) கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் தமிழருள் ஒரு பகுதியினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் நாடற்றவர்களானார்கள். 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 8 உறுப்பினரைப் பாராளுமன்றத்திற்கனுப்பிய மக்கள் இச்சட்டம் கொண்டு வந்ததின்பின் எந்த ஒரு உறுப்பினரையும் அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டது.

1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழியாக்குவோம்என அறிவித்தனர். அறிவித்ததின் மூலம் S.W.R.D பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததின் மூலம் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். 1956 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தவர்கள் சூன் மாதம் தாங்கள் அறிவித்தபடி சிங்களம் மட்டும்எனும் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.

1958 ஆம் ஆண்டு சனவரியில் இன்னொரு சட்டம் இதே ஆட்சியினரால் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தின்படி வண்டிகளில் பொறிக்கப்படும் எண்ணின் முதலெழுத்து ஸ்ரீஎனச் சிங்களத்தில் குறிப்பிடப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் ஈழ நிலப்பகுதியான கிழக்குப்பகுதியில் கல்லோயா அபிவிருத்தித் திட்டம்எனும் பெயரில் சிங்களவர் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் தமிழரின் நிலப்பகுதியைப் பறிக்கும் படுபாதகமான திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈழப்பகுதிகளில் அரசு உதவியுடன் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.

மேற்படி நடவடிக்கைகள் காரணமாகத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு 1958 ஆம் ஆண்டில் மிகப்பெரும் கலவரமாக உருவானது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களின் மார்புகளில், தொடைகளில் சிங்கள சிறி’ (ஸ்ரீ) குத்தப்பட்டது. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சிறிலங்காவிலிருந்து தமிழர்கள் ஈழத்தை நோக்கி ஓடி வந்தார்கள். சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் கப்பலில் அனுப்பப்பட்டனர்.

நீங்கள் அறிந்திருக்கும் 1983 ஆம் ஆண்டில் மட்டுமல்ல 1977 இல், 1958 இல் எல்லாம் தமிழர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் திருக்கோணமலை ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது ஈழத்தமிழர்களின் தாயகம் எதுவாக இருக்க முடியும். இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள்தானே.

இன்றைக்கு ஈழப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உள்ளதற்கும், அதன் விடுதலை அவாவாக தமிழீழம் தனியரசாக வேண்டுமென்பதற்கும் 1983 ஆம் ஆண்டுதான் காரணம் என்பதல்ல. ஈழத்தமிழர்களுக்கான தாயகக் கோட்பாடு 1920களில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1977ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழர்க்கான தாயக விடுதலைக் கோட்பாடு மக்கள் ஆணை பெற்ற அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டது.

அதுவே இன்றைய தலைமுறையினரிடம் அது கைமாற்றப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். அதனையே 1984 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது போராளிகளும் மிதவாத தலைவர்களும் இணைந்து நான்கு அம்சம் கொண்ட கோரிக்கையாக முன்வைத்தனர். 1970களின் பின்னால் முகிழ்ந்த இப்போராளித் தலைமுறை காந்தியத்தில் நம்பிக்கை இழந்து ஆயுத வழிப் போராட்டத்தில் தங்கள் முன்னோரின் கோரிக்கைக்காக போராடி வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போராட்டத்திற்கு தலைமை அளித்து போராட்டத்தை நெறிப்படுத்தி வருகிறார்கள். ஈழப்போரட்டத்தின் வெற்றியிலேயே உலகத் தமிழினத்தின் வாழ்வும் வரலாறும் தங்கியுள்ளது. ஏனெனில் வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களுக்குத்தான்.

நண்பர்களே,

ஈழப்போராட்டத்திற்கு முன்னுதாரங்கள் எதுவுமில்லை. உலகின் எந்த வல்லாண்மையாளரின் நலன்களுக்காகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. எங்கள் கால்களில் எங்கள் பலத்திலேயே நாங்கள் தங்கி இருக்கிறோம். நாங்கள் விடுதலை அவாவும், மனித நேயத்தை முன்னிறுத்தும், மற்றவர்கள் உரிமையை மதிக்கும், நட்பை தோழமையையே தேடுகின்றோம். உங்களிடமும் அதனையே எதிர்பார்க்கிறோம். உங்களின் தோளணைவு வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

நட்புடனும் தோழமையுடனும்

கி.பி.அரவிந்தன்.

(நன்றி: தமிழ்நாதம்)

நன்றி: கீற்று இணையம்

October 10, 2008 Posted by | கீற்று | Leave a comment

உலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்- கை.அறிவழகன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல் அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா, உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்.

எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் “மஸ்தானா, மஸ்தானாவின்” அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள். அதனால் தான் எழுதவில்லை.

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது. அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்…….

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டுபிடித்து கொலை வெறியோடு உங்கள் “நேச நாட்டு” விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்று தான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் “சார்க்” கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே!

அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்……

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை…..எனக்கு….

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வீடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிகளுக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே……..

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்

தம்பி யாழினியனுக்காக

July 11, 2008 Posted by | கீற்று | Leave a comment

காதல் ஜனநாயகமானால்…- லோப முத்ரா




தலித்துகள் கல்வி கற்காதவரை
விழிக்காதவரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்த ஊரில்
“அமைதி” இருந்தது!!
பெண்கள் கல்விகற்காதவரை
விழிக்காத வரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்தக் குடும்பத்தில்
“நிம்மதி” இருந்தது!!
அந்த ‘அமைதி’ ஒழிக!
அந்த ‘நிம்மதி’ ஒழிக!
ஒருவர் “பொறை” இருவர் நட்பு
சரிதான்;
எப்போதும் “பொறை” யாருக்கு?

சமூகத்தின் ஒரு பகுதியை
முடமாக்கிவிட்டு
சமத்துவம் பேசுவது அர்த்தமற்றது
குடும்பத்தின் செம்பாதியை
ஊமையாக்கி விட்டு
ஜனநாயகம் என்பது
சாத்திய மற்றது.
‘குடும்ப தினம்’ எதற்கு?
போற்றுவதற்கா
காப்பதற்கா?

போற்றுவதெனில் எதைப்
போற்ற விளைகிறாய்?
காப்பதெனில் எதைக்
காக்க விளைகிறாய்?
கணவன், குழந்தை
குடும்ப கவுரவம் இவற்றுக்காய்
உணர்ச்சிகளைக் கொன்று
தன்னைச் சிதைத்து
பிணமாய் வாழும்
பெண்மையைப் போற்றவோ!!

தன்னை இழந்து
தன்நாமம் கெட்டு
சம்சார சாஹரத்தில்
தீர்க்க சுமங்கலியாய்
என்றும் சுமைதாங்கியாய்
பெண்கள்
இருத்தலைக் காக்கவோ!!
சரி! சரி!

குடும்பம் என்பது யாது?
விதியே என வாய்த்ததுவோ!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டதால்
புளியமரம் ஏறுவதோ?
குடும்பம் என்பது யாது?
நாகரீக சமூகத்தின்
அடிப்படை அலகு.
இந்த அடித்தளம் தகர்ந்தால்
சகலமும் நொறுங்கும்
விலங்கினும் கீழாய்
வாழ்க்கை இழியும்.

குடும்பம் என்பது யாது?
முர்டோக் என்றோரு
மானிடவியலார் கூறுகிறார்:
“கூடி ஒரு இல்லத்தில் வாழ்ந்து
பொருளாதாரத்தில் ஒத்துழைத்து
வம்சவிருத்தியில் ஈடுபடும் குழு.”
மேலும் விரிக்கிறார்:
“சமூகம் அங்கீகரித்த
சட்டம் வரையறுத்த
ஒத்த வயதுடைய
ஒருவனும் ஒருத்தியும்
பாலியல் உறவு கொண்டு
பிள்ளைகள் பெற்று
(அ) தத்தெடுத்து
வாழ்வதன்னியில்
உடலாலும்
உணர்வாலும்
பொருளாதாரத்தாலும்
ஒன்றி வாழ்வது.”

குடும்பம் என்பது
தனிநபர்த் தேவையின்
விளைவு மட்டுமா?
அல்ல அல்ல.
சங்கிலிக் கண்ணிகள்
அறுந்திடாமல்
கூடிவாழும் சமூகப் பண்பாட்டின்
கூறுகளை
தலைமுறை தலைமுறையாக
கைமாற்றி கைமாற்றி
வளப்படுத்தி பலப்படுத்திட
கடமையும் பொறுப்பும் கொண்ட
அடித்தளமாகும்.

‘இன்பம் துய்க்கவும்’
‘இன்னல் எதிர்கொள்ளவும்’
கூடிவாழ வேர்கொள்வதுவே
குடும்பம் என்பதை
வரலாறு சொல்லும்.
சொத்தின் மீது
ஆசை வந்ததும்
சொந்தம் என்பதில்
மேல் கீழ் வந்தது
ஆணின் தலைமை
திணிக்கப்பட்டது.
ஆஸ்திக்கு ஆணென
அர்த்தம் புகுத்தப்பட்டது

பெண்ணின் நிலைமை
அடிமையானது
சிரிப்புக்குக் கூட
வரம்புகள் போடப்பட்டது
சமூக வேரில்
வெந்நீர் ஊற்றப்பட்டது
‘குடும்பம்’ இங்கே
சுமையாய்ப் போனது.
‘கூட்டுக் குடும்பமோ’
‘தனிக் குடும்பமோ’
அததற்கு ஆயிரம் பிரச்சனைகள்!
“பெண்ணே சுமை தாங்கி”
இரண்டுக்கும் பொதுவானது.

விவசாய வாழ்க்கையில்
உழைப்பில் இருந்த பங்கையும்
பின் இழக்க நேர்ந்தது
போராட்டங்கள் ஊடாகவும்
பொருளாதாரத் தேடலாகவும்
உழைக்கும் வாய்ப்பு
பெண்களுக்கு பெறப்பட்டது
இன்று, வீடு வேலைத்தளம்
இரண்டு ‘ஷிப்டு’
பெண்ணின் இடுப்பொடிகிறது
கூட்டை உடைத்தெறி என
கேட்பதில் வியப்பில்லை

கட்டுத் தளைகளை வெட்டியெறிய
முட்டி மோதுவதில் தவறே
இல்லை
கூடு சிதைந்தால் நாடு சிதையும்
கூடு தகர்ந்தால் அராஜகம் ஓங்கும்
கூட்டைக் காப்பது எப்படி?
இனி அது
பெண்ணின் பொறுப்பு அல்ல
ஆணின் பொறுப்பு
‘வாழ்க்கைத் துணை’ என
ஏனையோரை விஞ்சி
ஒரடி முன்வைத்த
வள்ளுவன்
கணக்கும் மாறியது
வாழ்க்கை ‘துணை’ அல்ல
வாழ்க்கை ‘இணை’ என்போம்.

சுகம், துக்கம்,
சுமை, சுதந்திரம்
எல்லாமே இருவருக்கும்
அடுக்களை முதல்
குழந்தை வளர்ப்பு வரை
எல்லாவற்றிலும்
‘புரிதலும், பகிர்தலும்’
குடும்ப ஜனநாயகத்தின்
அச்சாணி ஆகும்.
இனி தொடங்குவதையாவது
ஜனநாயகத்தில்
கால்பதித்து தொடங்கலாமே!

ஜனநாயகம்
அரசியலுக்கு மட்டுமல்ல
வாழ்வுக்கும் தான்.
காதலில் அதைத் துவங்கு
காதல் ஜனநாயகமானால்
குடும்ப ஜனநாயகம்
தானே பூக்கும்…
காதல் ஜனநாயகம்!
அதெப்படி?

ஈழப்பெண் கவிஞர்
நளாயினி தாமரைச் செல்வன்
கூறுகிறார்:
“காதல் என்றால்
என்னவென்று தெரியுமா?
உனக்கு
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்.”
நீங்கள் தயாரா? 

நன்றி

– லோப முத்ரா

http://www.keetru.com/literature/poems/lopamuthra.php

June 10, 2008 Posted by | கீற்று | Leave a comment