தமிழருக்கு காங்கிரஸ் இழைக்கும் துரோகம் : இந்திய இணையம்
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது‘, ‘தேவையற்றது‘ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன.
இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘காசாப் பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது.
இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையைத் தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது‘ என்று கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.
காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி‘களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது.
அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது. நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது?
சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே.
இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கின்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்ட தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு ‘போரை நிறுத்துங்கள்‘ என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை. அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே? இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை.
‘போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்‘ என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.
தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர்.
தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்h இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்கா அரசிற்கும் ஒரு ‘நல்ல புரிந்துணர்வு‘ உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.
அதனால்தான், இன்று வரை சிறிலங்கா அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை. காசாவில் உள்ள ‘இலக்குகளை‘ குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் ‘இலக்குகளை‘க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும்.
பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ‘பார்வை‘. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது. எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிப்பட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது.
ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது. அதனால்தான், ‘இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன‘ என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை.
அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.
அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா?
தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா? அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது.
இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள். அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS