மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

கலைஞரின் துதிபாடி கவிஞர்களே இந்த கவிஞனையும் கொஞ்சம் படித்து பாருங்கள்

சோவியத்தில் வாழ்ந்த பாரதிதாசன்

தமிழகத்தில் எப்படி ஒரு புரட்சி கவிஞன் பாரதிதாசன் தோன்றித் தமிழ்தேச பற்றை ஊட்டினானோ, அது போல் ருசியப்ப்பெரிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்த தாஜிக்கிஸ்தான் பகுதியில் அவார் என்னும் கிளைமொழியின் பெருமையைப் பாடிய பாவலன்தான் ரசூல் கம்ஸா தோவ்

அவன் ருஷ்ய தேசியம் பாடவில்லை. அவன் தன் தாய்மண் பற்றினை ஆவேசம் மிகுந்த சொற்களைக் கொண்டு கவிக்கனலை தோற்றுவித்தான். அவன் தன் தாய்நாட்டுக்காக பாடியதால் ருஷ்ய தேசியம் அவனை வெறுக்கவில்லை, மாறாக அவனை புகழ்ந்தது, அரசே அவனது வெளியீடுகளை வெளியிட்டது. அவனை வெறும் கவிஞனாக மட்டும் கருதாது. தாஜிக்கிஸ்தான் அரசாங்கம் நிர்வாகத்தில் பங்கு கொள்ள வைத்தது. தாஜிக்கிஸ்தான் இந்தியா, சினா போன்ற கிழக்கத்திய பண்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இம்மாநிலத்தில் (அல்ல நாட்டில்) பல மொழிகளில் வழங்கி வந்தன. அவற்றுள் ஒன்றே அவார் மொழி! அந்த மொழிக்கு உரிமையவனே ரசூல் காம்தோவ்.

அவன் எழுதுகிறான்….

ஓ..என் அருமை மிகு அவார் மொழியே!

நான் வாழ்வுக்கும் சாவுக்கும்

இடையில் தொங்கி திணறும்போது

உலகத்து மருந்துகள்

என்னை காப்பாற்றாது!

உலக மருத்துவரும் காப்பாற்ற மாட்டார்கள்!

ஆனால், அவார் மொழியே!

உன் இனிமை சொல்லே

என்னை காப்பாற்றும்!

அவன் மேலும் தொடர்கிறான்; பாடுகிறான்;

உலகின் பிற மொழிகளுக்கு

எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம்!

ஆனால்-

அவைகளில் நான் வாய்விட்டுப் பாடமுடியாது!

எம்மொழி வீழும் நாள், நாளை என்றால்,

இன்றே சாவு எனக்கு வரட்டும்!

பின்னர் சாவு அங்கே போகட்டும்!

பாவேந்தர் பாரதிதாசன் எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்! தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்.என்று வஞ்சினம் கூறியதைப் போல், ரசூல் கூறுகிறான்.

சுதந்திர தாஜிக்கிஸ்தானே!எழில் மலர்கள்

பூத்துக் குலுங்கும் நாடே!

நீ என் முகம்!

எப்பகைவனும் உன் மீது கைவைக்க விடமாட்டேன்.

உன்னை இழிவாக வசைபாடினும்

நான் தாங்கிக் கொள்வேன்.

எனது தாஜிக்கிஸ்தானை ஒரு இழி சொல் தொட விடமாட்டேன்.

நீ என் காதலி!

நீ என் சபதம்!

நீயே என் வழிபாட்டு குரியை!

உன் இறந்த, நிகழும் எதிர்காலங்கள் எல்லாம்

என்னோடே!

அதை யாரும் பிரிக்கவியலாது!

பாவேந்தனை போல் மொழி, நாடு பற்றிக் கோபுரத்தில் ஏறிக் குரல் கொடுத்தவன் ரசூல். அவன் தன் இனம் பற்றிப் பாடுகிறான்.

நான் அவார் இனத்தவன்!

நான் கண் திறந்தேன்!

அவார் மக்களைப் பார்த்தேன்

அவார் பேசும் மொழியைக் கேட்டேன்!

என் தாய் அவார் மொழித் தாலாட்டுப்

பாடினார்!

பார்த்தும், கேட்டும், நுகர்ந்ததும்

அவார் அல்லவா? இது என் சொத்து!

ஆம், நான் ஒரு அவார்?

உணர்ச்சிப் பிழம்பாய் வாழ்ந்த ரசூல் தன் தாய்மொழி விரிந்து பரவவில்லையே என்று கவலை கொள்ளவில்லை. இலக்கண, இலக்கியங்கள் நிறைய இல்லையே என்று வருந்தவில்லை.

எனது இதயம் எப்பொழுதும்

என் மொழி பற்றியே எண்ணுகிறது!

பொதுச்சட்ட மன்றில்

(பாராளுமன்றத்தில் தமிழுக்கு இடமில்லாதது போல முழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் போல)….அதுவே என் உயர்மொழி!என்கிறான்

பெல்ஜியத்தில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு ரசூல் செல்கிறார். அங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள கவிஞர்கள், தங்கள் தங்கள் பண்பாடு பற்றிக் கூறினர். ஒரே ஒரு கவிஞன் கனவான்களை! நீங்கள் பல தேசங்களிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் பல மக்களின் பிரதிநிதிகள்! ஆனால் நான் எந்நாட்டின் பிரதிநிதி அல்லன். நான் கவிதையின் பிரதிநிதி. எல்லா நாடுகளின் பிரதிநிதி! நானே கவிதை…என்று கூறிய கவிஞனைக் கட்டித் தழுவினார்கள்! ரசூலைப் பாராட்டியப் பெருமைப்படுத்தினர். தனது சொந்த மண்ணிற்குப் பிரதிநிதியாக முடியாதவன், இந்தப் பூமிக்குப் பிரதிநிதியாக முடியாது என்றான் கம்சதோவ்!

அவன் மேலும் கூறுகிறான்,

ஒருவன் நாட்டில் குடியேறி

அங்குள்ள பெண்ணை மணந்து வாழலாம்!

தாய் மண்ணில் தாய் இருக்கலாம்!

மனைவியின் தாய் தாயாவாளா?

தாஜிக்கிஸ்தான் அவார் நாட்டில் மொழிப்பற்று எப்படி ஓங்கி வளர்ந்துள்ளது,என்பதை ரசூல் ஒரு நிகழ்ச்சியால் விவரிக்கிறார் பாருங்கள்.

ரசூல் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே தன் அவார் இனத்து நண்பன் ஒருவனை அவனது இல்லத்தில் சந்திக்கச் சென்றார். பிறகு நாடு திரும்புகிறார். ரசூலைப் பார்க்கவும். தன் மகனின் நலம் விசாரிக்கவும் பெற்ற தாய் வருகிறார்

ரசூல் கூறினார். அவனது வளமிக்க வாழ்வு பற்றியும், செழுமை மிக்க தோற்றம் பற்றியும்,

அந்த தாய் ரசூல் நிறுத்துஎன்றாள்.

ஏன்?என்றாள் ரசூல்.

அவார் இனத்தவனாகிய என் மகன், உன்னுடன் அவார் மொழியில் பேசினானா? என்று கேட்டாள்.

இல்லை, வேறு மொழியில்!என்றான்.

உடனே அந்தத்தாய், நான் பெற்று வளர்த்த மகன், நான் சொல்லித் தந்த அவார் மொழியை மறக்க முடியாது. ஆகவெ என் மகனாக அவன் இருக்க முடியாது,என்று கூறி விட்டுக் கறுப்புத் துணியால் முக்காடிட்டு, ரசூல்! என் மகன் இறந்து வெகு நாளாயிற்றுஎன்றாள்.

இத்தகைய தாய்மார்களே, புறநானாற்றுத் தாயர் ஆவார்.

நினைத்துப் பாருங்கள்.

தமிழகத் தருதலைகள் பல வெளிநாடுகளில் குடியேறி, நாகரீகத் திமிரால் தமிழையே மறந்தும், பேசுவதற்கு நாணப்பட்டும் இருப்பதை.

அவார்த் தாயின் உணர்வை நம் தாயர்கள் பெறுக!!

அதோடு உணர்வுள்ள நல்ல படைப்பாளிகளையும் பிள்ளைகளையும் பெறுக!!!

September 22, 2009 - Posted by | ஈழம், கலைஞர், கவிஞர், தமிழ்

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: