மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசுகொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்’ பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி’களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு’ என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.

தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.

சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.

இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு’ நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.

மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.

இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு’ எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.

ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்’ என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.

தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.

கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்’ ராஜாஜியை “குல்லுகப் பட்டர்’ எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.

நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி’யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.

“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனும் தத்துவம்(!)தான்.

அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.

கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.

அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.

வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்’ எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.

கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்’ விளக்கம் வேறு தந்தார்.

எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்’ பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்’, “தளபதி’ என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.

பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.

கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2008

September 16, 2009 - Posted by | அண்ணா, புதிய ஜனநாயகம்

1 Comment »

  1. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    Comment by தமிழினி | September 17, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: