மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சாஸ்திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களல்ல! – பெரியார்

குடிஅரசு 1927, போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு

அக்கிராசனப் பிரசங்கம்சகோதரிகளே! சகோதரர்களே!இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப்பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக்கிறேன்.

என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷகாலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு 11 வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11வது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷ கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்ல வருகிறேன்.தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும் அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதிற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு அத்தொழிலை தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப்பேசுவதும், தீர்மானப்பதும் தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும் தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ, தேசம் முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியையடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாயிருக்கிறதென்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத் தன்மையையும் சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு வளர்க்கும் தேசத்துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையோ யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத் தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள்.

அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவைதான் காணப்படுகிறது. எனவே,இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும் தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும் மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர் களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும். ஆகவே, அந்த முதலாவது ஆரம்பாசிரியர்களின் யோக்கியதை இப்படியாய் விட்டது.

அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்பாசிரியர்களாகிய உங்கள் யோக்கியதையோ, உங்கள் வயிற்றுப்பாட்டுக்கே கான்பரன்° கூட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப்போகிற பிள்ளைகள் எப்படித்தக்க யோக்கியதை அடைய முடியும். கல்வி என்பது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமல்ல. அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால மக்கள் சுயமரியாதையோடும் சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும், அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாகத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

இவைகளை அறிந்தே வள்ளுவரும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும், கல்லாதார் அறிவில்லாதார் என்றும்”, “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்என்றும், “ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக்கூடும். இவைகள் எல்லாம் குழந்தைகள் தானாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திரும்பி அடித்துவிடுவான். ஒருவனை வைதால் அவன் திரும்பி வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும் நாயும் பூனையும் கண்ணில் படும்போதே கால எவ்வளவென்பதும் வாலுண்டென்பதும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும் மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்ராயம்.

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்று கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல. உங்களைவிடப் பெரிய சகலகலாவல்லபர்களிடத்தில் ஏம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்களை பெற்ற பையன்களும், ஒரு காபிக்கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு சாமி ஒரு கப் காப்பி கொண்டு வா என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான்.

இந்த பட்டம் எல்லாம் கல்வியாகுமா? இதை பெற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாவார்களா? வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்கிறார்களோ அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திரப் பாடம் தெரியாதோ அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளம் தெரியாதோ அப்படியே எம்.ஏ. படித்தவனுக்கு பிறருக்கு க்ஷவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும், வேத வியாக்கினங்களும் தெரியாதோ அப்படியே வித்வான்களுக்கும், சா°திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., சா°திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர், உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர அறிவாகாது.

இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்ககளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரியாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம.

எனவே இதுகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்விமுறையென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பைகளுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதத்தில் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில் நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்?

முன் காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டுவாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண் ஜாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத் தான் வீதிப்புரம் நடப்பான் என்று என் தகப்பனார் சொல்லியிருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக் கறந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன செய்து விடும் பார்க்கலாம் என்று சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜி°ட்ரேட் கச்சேரி, எத்தனை முன்சீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீ° கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா?

படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்க ஹீனமாக நடக்கத் தூண்டி அல்லல் படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.

August 29, 2008 - Posted by | குடியரசு, சாதி, பெரியார்

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: