மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

தமிழ் தேசியமும் பெண் விடுதலையும்

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் 
யதீந்திரா

எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
– கப்டன் வானதி 

1

இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் விடுதலையும்’ என்னும் நூலில் இந்த கட்டுரைக்கான வலுவான கருத்துக்கள் இருக்கலாம் என, மிக ஆவலுடன் படித்தபோதும் ஏமாற்றமே எஞ்சியது. இந்தியா, துருக்கி, ஈரான், எகிப்து போன்ற முன்றாமுலக நாடுகளின் போராட்டங்கள், பெண்விடுலையில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பேசியிருக்கும் குமாரி, கண்முன்னிருக்கும் ஒரு பெரிய சாட்சியத்தை எடுத்தாள விரும்பாதது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஒரு வேளை வர்க்க அரசியலை முன்னிறுத்தி சிந்திக்கும் குமாரிக்கு தமிழ் பெண்களின் புரட்சிகர தலையீடு பற்றி விவாதிப்பது கடிணமாக இருந்திருக்கலாம். எனினும் நான் இந்த கட்டுரைக்காக படித்தவைகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் எனது அபிப்பிராயங்களை வலுப்படுத்தவே உதவியிருக்கின்றன.

கடந்த காலங்களில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருத்தியல் ஆயுதங்களில் பெண்விடுதலையும் ஒன்று. அவ்வாறான விமர்சனங்களைச் செய்தவர்கள் தமிழ் சமூகத்தின் மாற்றங்கள் அனைத்தும் ஒரு இடைக்கால மாற்றங்களே அன்றி நிரந்தரமானவை அல்ல என்றும், பெண்களிடம் ஒரு வகையான ஆண் தன்மை ஊட்டப்படுகின்றதே அன்றி பெண்விடுதலை சார்ந்த சரியானதொரு கருத்தியல் உள்ளடக்கத்தை அவை கொண்டிருக்கவில்லை என்றும் வாதித்தனர். இன்னும் சிலரோ ஒரு படி மேல் சென்று விடுதலைப்புலிகளின் பெண்கள் தொடர்பான அணுகுமுறை வெறுமனே ஆட்சேர்ப்பினை அடிப்படையாகக் கொண்டதேயன்றி பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டதல்ல எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.

இது பற்றி அபிப்பிராயம் சொல்லும் சிறிலங்காவின் பிரபல பெண்ணிய ஆய்வாளர் கலாநிதி நெலூபர் டி.மெல் “தமிழரின் போராட்டம் தமிழ் பெண்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுக் கொடுக்கவில்லை, ஆண் போராளிகளின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காகவே பெண் போராளிகள் போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடக்கும் வரை பெண்களுக்கு வெளிப்படையான அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது அதன் பின்னர் அவர்கள் முன்னைய குறுகிய வட்டத்தினுள் தள்ளப்படுவார்கள்” என்று வாதிடும் நெலுபர், ஒரு கொழும்பு மையவாத சிங்கள ஆய்வாளராவார். அவரைப் போன்றவர்களது கருத்துகளுக்கு பதில் சொல்லுவதல்ல இங்குள்ள பிரச்சனை, ஆனால் இவ்வாறான கருத்துக்கள் பெண்ணியம் சார்ந்து சிந்திக்கும் நமது புலமையாளர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் தொற்றியிருக்கிறது என்பதில்தான் நான் அக்கறை கொள்கின்றேன்.

உண்மையில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பவர்கள் ஈழத்தமிழர் தேசியத்தின் தோற்றப்புள்ளியையும் அதன் படிமுறைசார்ந்த வளர்ச்சிப் போக்கையும் தெளிவாக புரிந்து கொண்டவர்களல்ல. ஈழத் தமிழர் சமூகத்தின் அகநிலை விடுதலைத் தேவைகள் சார்ந்து விவாதித்தவர்களில் பெரும்பாலானோர் தமது கருத்தின் உள்ளடக்கமாக புலி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தார்களேயன்றி, பெண்களின் விடுதலைத் தேவையின் மீதான அக்கறையையல்ல. புலி எதிர்ப்பிற்கான புள்ளிகளை தேடித்திரிவோர் தமிழ் சமூகத்தின் அகநிலை சிக்கல்களான சாதியம், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றை தமக்கான எதிர்ப்பு நியாயங்களாக வரித்துக் கொண்டனர். எனினும் தமிழ் சமூகத்தின் அகநிலை விடுதலைத் தேவைகள் சார்ந்து ஆரோக்கியமாக விவாதித்தவர்களும் உண்டு. எனினும் அவ்வாறானவர்கள் கூட ஈழத் தமிழ் தேசியத்தின் தோற்றப்புள்ளியிலிருந்து, தமிழ் சமூகத்தின் அகநிலை விடுதலைத் தேவையை மதிப்பிட்டவர்கள் என்று சொல்வதற்கில்லை. உண்மையில் தமிழ்த் தேசியத்தின் தோற்றப்புள்ளியையும், இன்று வரையான அதன் படிமுறைசார்ந்த வளர்ச்சி நிலையையும் கருத்தில் கொள்ளாமல் தமிழர் தேசியத்திற்கும் அகநிலை விடுதலைத் தேவைகளுக்கும் இடையிலான உறவினை விளங்கிக் கொள்ள முடியாது என்பதே எனது அபிப்பிராயம். இதனை அடித்தளமாகக் கொள்ளாத எந்தவொரு ஆய்வும், அவதானமும்; வெறும் புலி எதிர்ப்பு வாதங்களுக்கு மட்டுமே பயன்பட முடியும்

2

தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பெண்விடுதலைக்காகவோ அல்லது சாதிய விடுதலைக்காகவோ தோன்றிய ஒன்றல்ல. அது முற்றிலும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிங்கள பெருந்தேசியவாத ஒடுக்குமுறையால் உருப்பெற்ற ஒன்றாகும் எனவே தமிழ்த் தேசியத்தின் முதற்பணி சிங்கள அடிமைத் தளையிலிருந்து தமிழ் மக்களை விடுவித்தல் என்பதுதான். இதில் தடுமாறுவதற்கு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. இது மிகவும் வெளித் தெரியும் உண்மையும் கூட. ஈழத் தமிழ்த் தேசியம் என்பது ஒரு இனத்துவ நிலை தேசியம் என்பதை தெளிவாக குறித்துக் கொள்வோம். சிங்கள பெருந்தேசியவாத ஒடுக்குமுறையின் நீட்சிக்கு ஏற்ப தமிழர் தேசிய விடுதலைப் போராட்டமும் நீட்சி கொண்டது. இதன் தற்போதைய நிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் வளர்ச்சி நிலையும். இந்த அரசியல் உள்ளடக்கம் குறித்த சரியான புரிதலற்ற ஒருவர் தமிழ்த் தேசியத்திற்கும் பெண்விடுதலைக்கும் உள்ள தொடர்பை சரியாக கணிக்க முடியாது என்பதுடன், அவ்வாறான புரிதல்கள் எல்லாமே அரைகுறை பார்வைகளாகவே இருக்கும். ஏற்கனவே இது தொடர்பான உரையாடல்கள் எல்லாம் அவ்வாறான நிலையில் இருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். உண்மையில் தமிழ் தேசியத்திற்கும் பெண்விடுதலைக்கும் இடையிலான உறவென்பது முழுமைக்கும் பகுதிக்கும் இடையிலான உறவாகும். இது தமிழர் தேசத்தின் ஏனைய விடுதலைத் தேவைகளான சாதி, வர்க்கம் போன்றவற்றுக்கும் பொருந்தும். எனவே நான் மேற் குறிப்பிட்டவாறான பெண்விடுதலை சார்ந்த தவறான புரிதல்கள், ஒரு பகுதிசார்ந்த பிரச்சனையை முன்னிலைப்படுத்தி முழுமையானதொரு விடுதலையை நிராகரிக்கும் தவறிலிருந்தே நிகழ்கின்றது என்பேன்.

பெண்விடுதலை நமக்கு முக்கியமான ஒன்றுதான். சமூக மட்டத்தில் பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுமற்ற ஒரு தேசத்தையே நாம் அவாவி நிற்கிறோம் ஆனால் அதற்கு முதலில் தமிழர்கள் உயிர்வாழ்ந்தாக வேண்டும். சிங்களம், தமிழ் மக்கள் மீது தனது கோர ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டபோது ஆண்கள், பெண்கள், சாதி, தொழிலாளி, முதலாளி என்ற தனிநிலை அடையாளங்கள் மீது தனது ஒடுக்குமுறையை நிகழ்த்தவில்லை. தமிழர் என்ற இன அடையாளத்தின் மீதே தனது ஒடுக்குமுறைகளை படரவிட்டது எனவே சிங்களம் எந்த அடையாளத்தின் மீது தனது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதோ, எந்த அடையாளத்தை அழித்தொழிக்க முற்பட்டதோ அந்த அடையாளத்திற்காக போராடுவது, அதற்காக அணிதிரள்வது தமிழர் தேசத்தின் சகல பிரிவினரதும் கடமையாக இருந்தது, இருக்கிறது.

இந்த பின்புலத்தில்தான் பெண்கள் ஆயுதவழிப் போராட்டத்தில் தலையீடு செய்கின்றனர். பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பெருவாரியாக இணைந்து கொண்டனர். இன்று தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை சரி பாதியாக தாங்கிருப்பவர்கள் பெண்கள்தான். உலக விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே பெண்கள் ஆண்களுக்கு சமதையாக அரைவாசியாக பங்களிக்கும் ஒரேயொரு விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலை போராட்டம்தான். தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கிய புரட்சிகர மாற்றமாகும். இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால், எப்பொழுதுமே தமக்கு வெளியில் எதுவுமே இல்லையென்று எண்ணும் சில எழுத்தாளர்கள், புலமையாளர்கள் இந்த விடயத்திலும் தமது கையறு நிலைக்கு விளக்கங்களை புனைந்து வருகின்றனர்.

3

தமிழர் தேசிய அரசியலானது உள்ளடக்கதிலும், அதன் போராட்ட வடிவத்திலும் படிமுறை சார்ந்த மாற்றங்களூடாக நகர்ந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் 50:50 என்ற கோரிக்கையிலிருந்து, பின்னர் சமஸ்டிக் கோரிக்கையாக மாற்றமடைந்து இறுதியில் தனியான தமிழீழ அரசை ஸ்தாபித்தல் என்ற உயர்ந்த வடிவத்தை பெற்றது. இந்த படிமுறைசார்ந்த வளர்ச்சிப் போக்கில்; பெண்களின் அரசியல் தலையீடும் காலத்திற்கு காலம் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தினதும் அரசியல் எழுச்சியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அவர்களது பிரசண்ணம் நிகழ்ந்திருக்கிறது. இதனை புலிகளுக்கு முன்னர் புலிகளுக்கு பின்னர் என பிரித்து நோக்கலாம். இதனை பிறிதொரு வகையில் மிதவாத அரசியல் காலகட்டம், ஆயுதவழி புரட்சிகர அரசியல் காலகட்டம் எனவும் நாம் பிரித்து நோக்க முடியும். நமது சூழலைப் பொருத்தவரையில் பெண்களின் சமூக தலையீடானது முதன் முதலில் காலணித்துவ காலகட்டத்தில்தான் நிகழ்கின்றது. குறிப்பாக ஆங்கிலேய கல்விமுறையானது, அதுவரை கல்வியில் புறக்கணிப்பட்டிருந்த பெண்களுக்கு புதியதொரு பார்வையை வழங்கியது. கல்வி கற்ற பெண்களது எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க, கூடவே சமூக மட்டத்தில் அவர்களது நடமாட்டமும் பன்முக விடயங்களில் அவர்களது தலையீடும் அதிகரித்தது.

இந்த நிலைமையானது அதுவரை சமூக நியதியாக நிலைபெற்றிருந்த மரபுவாத ஆண் தீர்மானங்களில் பெரும் உடைவுகளை ஏற்படுத்தியது. அதன் நீட்சியாக, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகளவில் கல்வி கற்ற பெண்கள் உருவாகினர். சைவ உலகில் பெரும் மனிதராக கருதப்படும் ஆறுமுக நாவலர் ‘பறையும் பஞ்சமரும் பெண்களும்’ அடிவாங்க பிறந்தவைகள் என்று கூறியதை இந்த இடத்தில் மனங் கொள்ளலாம். 1931 இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதை அன்றைய பெரும் தலைவரான பொன்னம்பலம் இராமனாதன் எதிர்த்ததையும் இங்கு குறித்து கொள்வோம். இது பற்றி டொனமூர் சாட்சியத்தில் இராமநாதன் கூறிய கருத்துக்கள் மிகவும் புகழ் பெற்றவை “நீங்கள் எங்கள் பெண்களை அவர்கள்பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும் அதற்கப்பாலான உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்கக் கூடாது.” நாவலர், இராமநாதன் ஆகியோரின் கூற்றிலிருந்து பெண்கள் குறித்த அன்றைய தமிழர் சமூக கண்ணோட்டம் எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இத்தகையதொரு பின்புலத்தில், யாழ்பாணத்தில் உருவாகிய படித்த பெண்கள் தமது சயாதீனத்திற்காக குரல் கொடுப்பதுடன்தான், நமது சூழலில் பெண்களது அரசியல் பிரவேசம் நிகழ்கின்றது. 1920 களில் உருவாகிய யாழ் வாலிபர் காங்கிரஸ் பெண்களின் விடுதலை உணர்விற்கு களமமைத்த முக்கிய அரசியல் இயக்கமாக விளங்கியது. அன்றைய சூழலில் யாழ் வாலிபர் காங்கிரசின் சிந்தனைகள் முற்போக்கானவையாக இருந்தன. பின்னர் இடதுசாரி இயக்கங்களின் எழுச்சியிலும் பெண்கள் ஈடுபாட்டுடன் பங்களித்திருக்கின்றனர். இடதுசாரிக் கட்சிகளில் பங்களித்த பெண்கள் பெரும்பாலும் கட்சியின் ஆண் உறுப்பினர்களின் துணைவியர்களாக இருந்தபோதும் அவர்களது பங்களிப்பும் குறிப்பிடத்தக்வைதான். தமிழசுக் கட்சியின் காலத்தில் பெண்களின் பங்களிப்பு முன்னரைக் காட்டிலும் அதிகரித்தது.

உண்மையில் தமிழரசுக் கட்சி கால அரசியலில்தான் முதன் முதலில் நமது பெண்கள் அடையாள அரசியல் உணர்விற்கு ஆட்படுகின்றனர். அந்த வகையில் தமிழசுக் கட்சி கால பெண்களின் பங்களிப்பானது, நமது சூழலில் பெண்களது அரசியல் பங்களிப்பை பொருத்தவரையில் ஒரு முக்கிய பிரிகோட்டு புள்ளியெனலாம். இக்காலப்பகுதியில் தமிழரசு கட்சியின் கீழ் இயங்கிய மாதர் முன்னனி, கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரத்துடன் பங்காற்றியது. செயலூக்கம்மிக்க கட்சி உறுப்பினர்களாகவும், பிரச்சாரகர்களாகவும் வெகுஜன போராட்டங்களில் பெண்கள் பங்கு கொண்டனர். தமிழரசு கட்சியின் 57ம் ஆண்டு; சிறி எதிர்ப்பு போராட்டங்களில் பெண்கள் தீரத்துடன் பங்காற்றிய குறிப்புக்களுண்டு. தமிழர் தேசத்தின் பல பகுதிகளிலும் பெண்களை அணிதிரட்டும் பணிகளிலும் மாதர் முன்னனி ஈடுபட்டிருக்கிறது. பெண்களின் இத்தகைய மிதவாத அரசியல் பங்கேற்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் ஏகஅரசியல் தலைமையாக நிலைத்திருந்த காலம் வரை தொடர்ந்தது.

4

மிதவாத அரசியல் தலைமைகள் பெண் விடுதலை குறித்து சரியான பார்வைகளை கொண்டிருந்தார்கள் என்பதற்கு எந்த குறிப்புகளுமில்லை. தமிழர் தேசிய அரசியலில் கௌரமாக நினைவு கொள்ளப்படும் ளு.துஏ.செல்வநாயகம் அவர்கள் ஒருமுறையேனும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பேசியதற்கு சான்றில்லை. எனினும் பெண்களின் தன்னெழுச்சியை தமிழரசுக் கட்சி உள்வாங்கிக் கொண்டது. ஈழத் தமிழ் மக்களின் உயிர்ப்பான அரசியல் நிகழ்சி நிரலிலிருந்து படிப்படியாக மிதவாத தலைமைகள் மங்கிப் போனதைத் தொடர்ந்து, அவற்றின் அரசியல் வெளிச்சத்தில் தம்மை பார்த்த பெண் தலைமைகளும் அரசியல் அரங்கிலிருந்து நீங்கின, எனினும் பெண்கள் மத்தியில் தொடர்ச்சியாக உருத்திரண்ட விடுதலை அரசியல் உணர்வுதான் பின்னர் ஆயுதவழி அரசியல் பங்கேற்பாக மாறியது. அறியப்பட்ட தகவல்களின்படி ஈழத் தமிழர் தேசிய இயக்கத்தில் 25 இற்கு மேற்பட்ட ஆயுதவழி போராட்ட அமைப்புக்கள் தோன்றியதாக கூறப்படுகின்றது. இவ்வாறன இயக்கங்கள் அனைத்திலும் பெண்களின் பங்களிப்பும் ஏதோவொரு வகையில் இடம்பெற்றிருக்கின்றன.

எனினும் குறிப்பிட்ட சில வலுவான இயங்கங்களிலேயே பெண்கள் அதிகளவில் அரசியல் செயற்பாடுகளில் பங்குகொண்டிருந்தனர். அன்றைய சூழலில் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புட்சிகர விடுதலை முன்னணி போன்ற இயக்கங்கள் பெண்களை உள்வாங்கி செயற்பட்ட முக்கிய இயக்கங்களாக இருந்தன. பெண்களின் பங்களிப்பானது ஆரம்பத்தில் அமைப்புக்களுக்கு தேவையான தகவல்களை சேகரித்து வழங்குதல். அவற்றின் ஆவணங்கள், சாதனங்கள் என்பவற்றை பாதுகாத்தல் என ஆரம்பித்து இறுதியில் முழு நேர உறுப்பினர்கள் என்ற நிலைக்கு முன்னேறியது. 1983இல் சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட இன அழித்தொழிப்பிற்கு பின்னர், பெண்கள் ஆயுத அமைப்புக்களில் இணைந்து கொள்வதும் பயிற்சி பெறுவதும் பெரும் வீச்சில் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான பெண்கள், அதுவரை சமூக மரபாக்கப்பட்டிருந்த தளைகளை அறுத்துக் கொண்டு, தமது சொந்த முடிவுகளின் படி பல்வேறு ஆயுத இயக்கங்களிலும் இணைந்து கொள்ள முன்வந்தனர்.

எனினும் இவ்வாறு தன்முனைப்பில் இணைந்து கொண்ட பெண்களின் அனுபவங்கள் குறிப்பிட்ட ஒருசில அமைப்புக்களின் நடவடிக்கைகளால் எதிர்மறைத்தன்மை வாய்நததாகவும் அமைந்துவிட்டது எனலாம். புரட்சிகர சிந்தனைகளை பிரச்சாரம் செய்த அவ்வாறான இயக்கங்கள் தன்முனைப்பாக இணைந்து கொண்ட பெண்களின் அரசியல் ஆர்வத்தை தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைப்பதற்கான தெளிவான வேலைத்திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமையானது அவ்வாறான ஆயுத அமைப்புக்களில் தங்களை இணைத்துக் கொண்ட பெண்கள் படிப்படியாக அரசியல் நீக்கத்திற்கு ஆளாக்கியது. உண்மையில் சில அமைப்புக்கள் பெண்களை வெறுமனே மரபார்ந்த சமூக கண்ணோட்டத்தில் வைத்தே நோக்கினர். இதன் நீட்சி தேசத்தின் வீடுதலை என்னும் உயர்ந்த நோக்கில் தமது அமைப்பில் இணைந்து கொண்ட பெண்களை ஆண் உறுப்பினர்கள் சிலர் தமது பாலியல் பண்டங்களாக பயன்படுத்திக் கொள்ளும் அவலம் வரை நீண்டது. Pடுழுவு அமைப்பின் உள் அவலங்களை சித்தரிக்கும் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் அவ்வமைப்பின் உயர்மட்டத்தினர் சிலரின் பெண்கள் தொடர்பான கண்ணோட்டத்திற்கு சான்றாக அமைந்திருக்கின்றது.

தமிழ் தேசிய அரசியலில் பெண்கள் பங்களிப்பின் இறுதிக்கட்டமாகத்தான், விடுதலைப்புலிகளின் தலைமையிலான தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் விளங்குகின்றது. விடுதலைப்புலிகள் ஒரேயோரு தமிழ் தேசியத் தலைமையாக பரிணமித்ததைத் தொடர்ந்து, தமிழ் தேசியத்தையும் பெண்களின் விடுதலையும் இணைக்கும் அனைத்து உரையாடல்களும் விடுதலைப்புலிகளை மையப்படுத்தியதாகவே இருந்தன. இன்று ராதிகா குமாரசுவாமியிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் சில பெண் எழுத்தாளர்கள் வரை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் தலையீடு குறித்த, அவர்களது அனைத்து வகை உரையாடல்களும், விடுதலைப்புலிகளைத்தான் மையப்படுத்தியிருக்கிறது. எனவே சமகால எழுத்துக்களின்படி தமிழ்த் தேசியமும் பெண் விடுதலையும் என்ற தலைப்பானது இறுதியில், ‘தமிழீழ விடுதலைப் புலிகளும் பெண் விடுதலையும்’ என்ற தலைப்பாக உருமாறிவிடுகிறது.

நான் ஏலவே குறிப்பிட்டது போன்று தமிழ்த் தேசியத்தின் தோற்றப்புள்ளியை விளங்கிக் கொள்வதிலிருந்துதான் இன்றைய புலிகளின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்திற்கும் பெண்விடுதலைக்கும் இடையிலான பிணைப்பை விளங்கிக் கொள்ள முடியும். ஈழத் தமிழர் தேசிய அரசியலை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள், ஏற்படுத்திய உடைவுகள் மிகவும் ஆழமானவை. எப்போதுமே செயல்களில் அதிக நம்பிக்கையுடைய விடுதலைப்புலிகளின் அணுகுமுறைகள் ஈழத்து தமிழ்ச் சூழலைப் பொருத்தவரையில் பாரியதொரு பாய்ச்சல் என்பதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. நமது அசியல் வரலாற்றில் விடுதலைப்புலிகளின் வரவுடன்தான் 150 வருட கால சைவ வேளாள அரசியல் தலைமைத்துவம் முடிவுக்கு வருகின்றது. இது தமிழ்த் தேசிய அரசியலைப் பொருத்தவரையில் மிக முக்கியமானதொரு உடைவாகும். ஆனால் இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால் தமிழர் தேசத்தின் அகநிலை விடுதலை சார்ந்து விவாதிப்போர், தங்களது வசதி கருதி இந்த உண்மையை இலகுவாக தள்ளிவிடுகின்றனர்.

இதே போன்றுதான் பெண் விடுதலை விவகாரத்திலும் ஈழத் தமிழ்ச் சூழலில் புலிகள் செயல் மூலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும், அந்த மாற்றங்கள் சமூக மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளையும் இலகுவாக நிராகரித்துவிட்டு, தமது முன்கூட்டிய முடிவுகளுக்கு ஆதாரங்களை சேகரிப்பதிலேயே சிலர் கவனம் கொள்கின்றனர். இதிலுள்ள பெரிய வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு விமர்சிப்போர் பலர் தம்மை மார்க்சியம், பின்மார்க்சியம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். தம்மை முற்போக்காளர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, மேற்கின் பல்வேறு சிந்தனைகளை துணைக்கழைத்துக் கொள்ளும் இவ்வாறான புலமையாளர்கள் பலரும் நடைமுறையிலிருந்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்னும் மிக இலகுவானதொரு விடயத்தை மறந்துவிடுகின்றனர்.

5

நான் பெண் புலிகளுடன் உரையாடியோ, அவர்களது பெரும்பாலான எழுத்துக்களை படித்தோ எனது கருத்துக்களை பதிவு செய்யவில்லை. இது ஒரு விரிவான ஆய்வுமல்ல. எனது அவதானங்களின் அடிப்படையில்தான் இங்கு, சில அபிப்பிராயங்களை பதிவு செய்திருக்கிறேன்.. நடைமுறையிலிருந்து முடிவுகளுக்கு வருதல் என்ற மார்க்சிய அணுகுமுறையினூடாகத்தான் நான் இந்த விடயத்தை அணுகியிருக்கிறேன். நான் ஓமந்தை வழியாக பயணித்த மிகக் குறைந்தளவான சந்தர்ப்பங்களில் புலிகள் செயல் மூலம் ஏற்படுத்திய மாற்றங்களை அவதானித்திருக்கின்றேன். இந்த மாற்றங்கள் நிரந்தரமானவை அல்ல என்று வாதிப்போர் இந்த மாற்றங்கள் சமூக மட்டத்தில் நிரந்தரமான மாற்றத்திற்கான ஆரம்பமாக ஏன் இருக்க முடியாது? என்ற கேள்வியில் கவனம் செலுத்துவதில்லை.

எந்தவொரு மாற்றமும் தானாக தோன்றுவதில்லை. சகல மாற்றங்களும் அதற்கான தேவையிலிருந்தும், புறச்சூழலிலிருந்துமே தோன்றுகின்றன. இன்று அரைவாசியாக நமது விடுதலைப் போரில் பங்கு கொண்டிருக்கும் பெண் போராளிகள், நமது சமூகத்தின் பெண் தொடர்பான மரபுவாதங்களை பல்வேறு வகையில் உடைத்திருக்கின்றனர். இதில் கவனம் கொள்ள வேண்டியது இம் மாற்றங்கள் எவையும் பிரச்சாரங்களினாலோ, புலமை விவாதங்களினாலோ நிகழ்ந்தவை அல்ல. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் சமூக அளவில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகள் என்ற வகையிலேயே நாம் இந்த விடயத்தை பார்க்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் பெண் விடுதலைக்கு ஆற்றும் அதி உயர்ந்த பங்களிப்பு என்பது இதுதான்.

பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொள்வது மட்டும் பெண் விடுதலையைக் கொண்டு வந்துவிடாது என்றவகை விவாதத்தை, நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருக்கின்றது. தமிழர் போராட்டத்தின் அடிப்படைகளையே விளங்கிக் கொள்ள முடியாத பெண்ணியர்கள் சிலர் இவ்வாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான வாதங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களின் சமூக பங்களிப்பையே ஒட்டு மொத்தமாக மறுப்பதாக அமைந்துவிடுகிறது. ஒரு தேசிய இனம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போது, அந்த தேசிய இனத்தின் பகுதியாக அமையும் பெண்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லையென்று பெண்கள் ஒதுங்கிக் கொள்ள முற்படுவது எந்த வகையில் பெண் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பது உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. உண்மையில் மேற்கின் பெண்ணிய சிந்தனைகளை அப்படியே அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் வாந்தி எடுக்கும் தவறிலிருந்துதான் இவ்வாறான பார்வைகள் வெளிவருகின்றன.

ஒரு முறை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கவிஞையான குட்டிரேவதி ஈழம் வந்திருந்தபோது அவருடன் உரையாட முடிந்தது. விடுதலைப் போரில் பெண்களின் பங்களிப்பின் அடிப்படைகளையே விளங்கிக் கொள்ள முடியாத அவர், ஆண்களால் உருவாக்கப்பட்ட போருக்கு ஏன் பெண்கள் பங்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவரது புரிதலைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். பெரும்பாலான தமிழக பெண் எழுத்தாளர்களின் பிரச்சனையிது. உண்மையில் பெண்ணிய சிந்தனைகளை நமது சூழலுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என்ற பார்வை நமக்கு அவசியம். நமது அனுபவங்களும், நமது சமூக அமைப்பும் வேறானது. இன்று கறுப்பின பெண்ணியர்கள் மத்தியில் இவ்வாறான விவாதங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. கறுப்பின விடுதலையிலிருந்து பெண் விடுதலையை பிரிக்க முடியாது என்ற வாதங்களை கறுப்பின பெண்ணியர்கள் முன்வைக்கின்றனர். இது பற்றி அவதானம் செலுத்தும் ஆபிரிக்க பெண் சிந்தனையாளர் மொஹன்ரியின் கருத்துக்கள் கவனிக்கதக்கன.

மேற்கத்திய பெண்ணிய உரையாடலில் மூன்று அடிப்படை பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மொஹன்ரி, முதலாவது பெண்களை அவர்களது வர்க்கம், இனக்குழுமம் அல்லது இன அடையாளம் என்பவற்றை கருத்தில் கொள்ளாது, அவர்களை ஒரு குழுவினராக கருதுவது, இரண்டாவது காரணமில்லாமல் பெண்களின் அனுபவத்தை உலகப் பொதுவாக்குவது, மூன்றாவது மேற்கு பெண்ணியர்களின் உரையாடல்களில் உள்ள இருமை நிலை அதாவது ஆண் பெண் இருபாலரும் அடுத்தடுத்து வைத்து நோக்குவதாகும். இந்நிலைமையானது மூன்றாம் உலக பெண்ணை தனிமைப்படுத்த முற்படுகிறது ஏனெனில் இங்கே அவள் அறியாமை, ஏழ்மை கல்வியறிவின்மை, பாரம்பரியத்தின் மீதான இறுகிய பிடிப்பு, வீட்டுப் பிணைப்பு, குடும்பப்பாங்கு என்பவைகைளில் கட்டுண்டு கிடக்கிறாள் மேற்கு வெள்ளை பெண்ணியவாதியோ நவீன கல்வி அறிவுள்ள தன் உடலைத் தானே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மையுள்ளவளாக திகழ்கிறாள். இவ்விரண்டு போக்கையும் சமப்படுத்தி நோக்க முடியாது என்கிறார் மொஹன்ரி.

6

ஈழத் தமிழர் தேசிய அரசியலைப் பொருத்தவரையில், பெண்களின் உயர்ந்த பங்களிப்பானது தமிழர் மரபுசார் சிந்தனைப் போக்கில் பெரியதொரு உடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவிற்கு சமூகத் தளத்தில் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது என்பதும் உண்மையே. கடந்த முன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் தமிழீழ விடுதலைப் போரில் பெண்கள் ஈட்டிய சாதனைகள், அளப்பரிய பங்களிப்புக்கள் தமிழ் சமூகத்தில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்ட தமிழ்த் தேசியத்தின் படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கில் பெண்கள் தமது பங்களிப்பை வழங்கிய போதும், அவர்கள் பெரும்பாலும் அரசியலில் பங்கு கொண்ட ஆண்களின் செல்வாக்கிற்குட்பட்டவர்களாகவும் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் இருந்தனர். அந்தச் சூழலில் ஒருவகையான வர்க்க, சமூக அந்தஸ்த்துப் பின்னனிகள் செல்வாக்குச் செலுத்தியதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இன்று விடுதலைப் போரில் பெருவாரியாக பங்கு கொண்டிருக்கும் பெண் போராளிகள் எந்த வர்க்க, சமூக பின்னணிகளுமற்றவர்கள். எனவே உண்மையான பெண்விடுதலைக்கான அடித்தளமென்பது இங்கிருந்துதான் உருவாக முடியும்.

போராட்ட அளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பலவும், சமூக மட்டத்தில் ஏற்படவில்லை என்பது உண்மைதான் ஆனால் அதனையும் விடுதலைப்புலிகள் தட்டில் வைத்து தர வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதுதான் பிழையானது. அறியப்பட்ட வரலாற்று அனுபவங்களின் படி இதுவரை நடந்துள்ள புரட்சிகள் அனைத்தும், ஒருவகை ஆணாதிக்க முறைமைக்கு பதிலாக இன்னொரு வகையான ஆணாதிக்க முறையை நிறுவிவிடும் எதிர்மறையை உருவாக்கிவிடுகிறது என்ற பெண் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை அப்படியே முழுமையாக நிராகரிக்க முடியாவிட்டாலும் அவ்வாறான அனுபவங்கள் நமக்கும் ஏற்படும் என்றும் நாம் ஆருடம் கூறிவிட முடியாது. உயிர்ப்பான சமூக சக்திகள் ஒவ்வொருவரும், ஒரு தேசிய விடுதலைப் போராட்டமானது சமூகத் தளத்தில் ஏற்படுத்தும் உடைவுகளை எவ்வாறு தாம் அவாவிநிற்கும் சமூக விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும், அதனை குறிப்பிட்ட சமூக பிரிவினரின் விடுதலைத் தேவைகளோடு எவ்வாறு இணைக்க முடியும் என்பது குறித்தே சிந்திக்க வேண்டும். அதுதான் தமிழர் தேசத்தின் அகநிலை விடுதலை குறித்து சிந்திக்கும் ஒவ்வொரு புலமையாளர்களதும் கடப்பாடாகும்.

உதவியவைகள்

1. Feminism and Nationalism in the Third World – Dr.Kumarijeyawerthana
2. சுதந்திர வேட்கை – அடேல் பாலசிங்கம்
3. விடுதலைப் போரும் பெண் விடுதலையும் – கலாநிதி க.சோமாஸ்கந்தன்
4. African Women and literature – Curolyn Kumah ( West African Review – 2000)

– யதீந்திரா (jathindra76@yahoo.com)

http://keetru.com/literature/essays/yathindra_2.php

 

August 27, 2008 Posted by | Uncategorized | Leave a comment

நாய் வாழ்க்கை வாழ்க்கையும் தமிழர்களும்.

பணக்கார, நடுத்தர,ஏழை என எல்லோர் வீட்டிலும் நாயை வளர்க்கும் பட்சத்தில், நாய் மீது அன்பை பொழிவர், கொஞ்சம் நாய் மீது அன்பு கூடிவிட்டாலோ தாங்கள் சாப்பிடும் தட்டிலேகூட உணவு வழங்க தயங்க மாட்டார்கள் நம் மனிதர்கள்(இதில் தமிழர்களும் அடங்குவர்கள்தானே!), இவ்வளவு ஏன் தங்கள் படுக்கையிலே கூட உறங்க கூட நாயை அனுமதித்து விடுவர். ஆனால், நாய்க்கு பெண் வழங்கமாட்டார்கள், வழங்க முடியாது ஏனென்றால் அது இயற்கைக்கு முரணானது. நாய் மனித இனமல்ல.

            இதையே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும், சாதிக்குள் மட்டும்தான் பெண் எடுப்பேன்/கொடுப்பேன் என்ற கொள்கை கொண்ட (ஈன)மனித தமிழர்கள் இன்னொரு சாதிக்காரனை நாயைவிட உயர்வாக என்ன நடத்திவிடுகிறான்?

 

           இன்றைய தொலை-தொடர்பு/தொழில்நுட்ப உலகத்தில் தொடர்பு பெருகி விட்ட காரணத்தினாலும், நாகரீகம் என்ற போர்வையில் பேச வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்திலும் வேற்று சாதி மனிதனோடு தொடர்பு ஏற்படும், நட்பு உருவாகும், வீட்டிற்கு அழைத்து செல்ல நேரிடும், உணவளிக்க நேரிடும், ஆனால், பெண் கொடுக்க மாட்டான், உறவு ஏற்படுத்தி கொள்ள மாட்டான், ஏனென்றால் அவன் வேறு சாதியாம்!

           ஒரு சாதிக்காரன் இன்னோர் சாதிக்காரனை நாய் போல நடத்துகிறான், மற்றொருவன் இவனை நாய் போல எண்ணுகிறான். இதுதானே சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தமிழனின் நிலை.

 இது நாய் பிழைப்பு அல்லாமல் வேறென்ன?

August 27, 2008 Posted by | இழிவு, மதம் | , , , , | Leave a comment

புத்தர் கொள்கைகளை மதம் என்று சொல்வது அழிக்கும் சூழ்ச்சியே – பெரியார்

பார்ப்பன ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும், வாழ்வுக்கும் என்ன ஆதாரம் என்றால், முதலாவதாக இந்து மதம். அதாவது, வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட மதம். நம் மக்களில் பெருத்த அறிவாளிகள் என்பவர்களிலும் கூட 100க்கு 75 பேர் இந்த இந்து மதத்தை ஒப்புக் கொண்டு ‘நாங்கள் இந்துக்கள்’ என்கிறார்கள். இரண்டாவதாகப் பார்ப்பனர்களால் ஏதேதோ எப்படியெப்படியோ ஆக்கப்பட்ட கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளை, நம்மவர்களில் 100க்கு 50 பேருக்கு மேலாக ஒப்புக் கொள்ளுகிறார்கள். மூன்றாவதாகப் பார்ப்பனர்கள் எதையெதை மத ஆதாரங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்களோ, அவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவைதான் பார்ப்பன ஆதிக்கம் நிலை பெறுவதற்கு உதவியாய் இருக்கின்றன.

நீங்கள் நினைக்க வேண்டும் – நாம் எதனால் கீழ் ஜாதி மக்கள், சூத்திர மக்கள் என்றால், இந்து மதத்தின்படி, அந்த மதத்திற்கான கடவுள்களின்படி, அந்த மதத்தையும், கடவுளையும் விளக்கும் சாஸ்திர, புராண இதிகாசங்களின்படி நாம் சூத்திரமக்கள். உள்ளபடியே இந்த நாட்டு ஜன சமுதாயத்தில் நாம், ‘சூத்திர’ மக்கள், கீழ் ஜாதி என்று சொல்லப்படுகிற நம் மக்கள் – 100க்கு 90 பேராக உள்ள நாட்டுப் பெருவாரியான மக்கள் சமுதாயத்தவர் ஆவோம்.

இவைகளையெல்லாம் நாம் எடுத்துச் சொன்னால், நம் ஜாதி மக்கள் என்பவர்களே, எந்த மக்களைப் பார்ப்பான் ‘சூத்திரன்’ என்றும் ‘தேவடியாள் மக்கள்’ என்றும் கற்பித்திருக்கிறானோ, அந்த மக்களே நம்மிடம் தகராறுக்கு வருகிறார்கள். காரணம் என்ன என்றால், நான் முன்பே சொன்னபடி அந்த மக்களுக்குப் பார்ப்பன ஆதிக்க ஆதாரங்களான கடவுள், மத, சாஸ்திரம் முதலியவைகள் பற்றிய நம்பிக்கையும், ஒப்பமுமேயாகும்.

இப்படியிருக்கும்போது நாங்கள் மாத்திரம் இந்தக் கொள்கைகளை, கருத்துக்களைச் சொல்லவில்லை. இப்போது நாங்கள் சொல்லுகிற எவையெவைகளை நீங்கள் நாத்திகம் என்று சொல்லுகிறீர்களோ, அந்தக் கொள்கைகளை புத்தர் 2500 ஆண்டுகாலத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்று புத்தரை– அவருடைய கொள்கைகளை நம்முடைய கருத்துக்குத் துணையாக எடுத்துக்காட்டி, மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த புத்தர் கொள்கைகள் வசதியாக இருக்கின்றன.

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் எனப்படுகிற இந்த ஆரிய மதத்தைக் கண்டித்து – அதன் அடிப்படையான கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பார்ப்பன ஆதிக்க மூலங்களான மோட்சம், நரகம், புரோகிதம், ஆத்மா, முதலியவைகளைக் கண்டித்து, அவை எல்லாம் பித்தலாட்டமானவை என்பதாகக் கூறியுள்ளார்.

தோழர்களே! புத்தர் போதித்தவை என்பவை ஒரு மதம் அல்ல. நீங்கள் நன்றாக கவனத்தில் வைக்க வேண்டும். புத்தர் போதித்தவைகளை மதம் என்று சொல்லுவது, புத்தர் கொள்கையின் வலுவைக் குறைப்பதற்காகவும், அதுவும் மற்ற மதங்களைப் போல ஒரு மதம் என்பதாகி விடுவதற்காகவுமே தவிர வேறில்லை. ஒரு மதம் என்று சொன்னால், அது என்றைக்கும் யாராலும் மாற்ற முடியாதது. தோன்றிய காலத்தில் என்னென்ன கோட்பாடுகள், தத்துவங்களைக் கொண்டதாக இருந்ததுவோ அவைகளை அப்படியே பின்பற்றி அனுஷ்டித்து வரவேண்டும். மதத்தை ஏற்படுத்தியவர்கள் அன்றும், இன்றும் என்றும் ஆக முக்காலங்களையும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்பதாகக் கருதப்பட்டு அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தான் ஆகும். அதை மாற்றியோ, அல்லது அவை ஏற்றதாய் இல்லையே என்று எதிர்த்தோ, இப்படி நடந்திருக்க முடியுமா என்று சந்தேகித்துப் பேசுவதோ அந்த மதத்திற்கு விரோதமானது ஆகும்.

புத்தர் கொள்கைகள் அப்படி அல்ல; அவருடைய கொள்கைகளை மாற்றாமல் என்றென்றும் அப்படியேதான் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடோ, நிபந்தனையோ இல்லை. புத்தர் கொள்கை அறிவை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் காரியத்தையும் அறிவின்படி தடையில்லாமல் தாராளமாக பகுத்தறிவுடன் ஆராய்ந்து ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டது. எனவேதான் புத்தருடைய கொள்கைகள் மதம் அல்ல. அதை மதம் என்று சொல்லுகிறது, புத்தர் கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற உள் எண்ணத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சி காரியமாகும்.

இன்னும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லப்படுவது வேதங்கள் ஆகும். ஆனால் அந்த வேதங்களையே அவைகளின் கூற்றுகள் பற்றியே பிய்த்து எறிந்துவிட்டார்கள். வேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார்ப்பனர்கள் திராவிட மக்கள் மீது வெறுப்புக் கொண்டு பாடிய பாட்டுக்கள் என்பதாக எழுதி விட்டார்கள். 

24.7.1954 அன்று சென்னையில் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டில் ஆற்றிய உரை

August 27, 2008 Posted by | மதம் | , | Leave a comment

ஆட்சியில் தமிழினத் தலைவர் – சாக்கடையில் தமிழர்கள்!-அநாத்மா

மீள முடியா துயர் மிகுந்த வாழ்க்கை துப்புரவுப் பணியாளர்களுக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊதிய உயர்வும் நவீன வாழ்வும் மேல்தட்டினருக்கு வசப்பட்ட ஒன்றாக விரிந்து கொண்டிருக்கையில், துப்புரவுத் தொழிலாளருக்கு இன்றும் ஒரு மாதக்கூலி ஆயிரத்தைத் தாண்டவில்லை. கழிவுகளோடு மட்டுமே கழியும் பொழுதுகள் எப்போது முடிவுக்கு வருமென்ற ஏக்கம் கூட துப்புரவுப் பணியாளர்களுக்கு இல்லை. காரணம் அதுவொன்றுதான் அவர்களின் வாழ்வாதாரம். ஆனால் அதை அனுபவிக்கக்கூட துப்புரவுப் பணியாளர்களுக்குதான் எத்தனைத் தடைகள்?

சென்னை மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் 2025 தற்காலிகப் பணியாளர்களை, சூலை மாதம் பணி நிரந்தரம் செய்தது தமிழக அரசு. மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் 2ஆவது மண்டலத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றி ஆணையிட்டுள்ளனர். ‘இங்கு பணியாற்றவே ஆட்கள் குறைவாக உள்ள போது, இங்கிருந்து பணியாளர்களை எப்படி மாற்றம் செய்யலாம்’ என்று கவுன்சிலர்கள் மேயரிடமும், ஆணையரிடமும் கேள்வி எழுப்பியதால் தொழிலாளர்கள் தற்காலிகமாக அங்கேயே பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படாமலும் அங்கு சென்று பணியில் சேர முடியாமலும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விசாரிக்க பணியாளர்களை சந்தித்த போது, தங்கள் பிரச்சனைகளை கொட்டித் தீர்த்தனர்.

எவ்வளவு தொலைவில் வீடு இருந்தாலும் காலை 6 மணிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர் ஆய்வாளர்கள். தூய்மைப் பணிகளில் எந்த விதத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத கவுன்சிலர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனையை செய்கிறது மாநகராட்சி. ஆனால் நாள்தோறும் குப்பை அள்ளி, பாதாள சாக்கடையில் மூழ்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறை கூட மருத்துவம் கிடையாது, பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது. அவர்கள் நவீன உலகின் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் நிலை இது என்றால், 25 ஆண்டுகளாக தினக்கூலிகளாகவே இருக்கும் 1000க்கும் மேற்பட்டோரின் நிலை இன்னமும் கொடுமையாக உள்ளது. மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் 59 தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு உத்தரவாதமின்றி தவித்து வருகின்றனர். கல்வித் துறையில் பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் என்ற பெயரில் 900 பேர் பணிபுரிகின்றனர். பெயருக்குத்தான் பகுதி நேரப் பணியாளர்கள். ஆனால் காலை 7 மணியில் இருந்து நண்பகல் 2 மணி வரை வேலை செய்ய வேண்டும். இவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 335 ரூபாய் மட்டும்தான். தூய்மைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தலித்துகள் தான்.

மிகக் குறைந்த அளவிலேயே இடைநிலைச் சாதியினர் உள்ளனர். இவர்கள் பெயருக்கு மாநகராட்சி ஊழியர்களாக இருந்து கொண்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள். தெருவிற்கு வந்து துடைப்பத்தை எடுத்து பெருக்கமாட்டார்கள், குப்பை அள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்களின் சாதிப் பெருமையை கட்டிக் காக்க ஆய்வாளருக்கு மாதம் 1500 ரூபாய் (முறைப்பணம்) கொடுத்து விடுவார்கள். ஒருவர் ஒரு கிலோ மீட்டர் வரை பெருக்கி குப்பை அள்ள வேண்டும் என்று நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வளவு வேலைகளை ஒருவர் செய்யும் போது அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் விடுப்பு எடுக்கும் நிலை உருவாகி, வருமான இழப்பு ஏற்பட்டு மேலும் சிக்கலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சாலையைப் பெருக்கி தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் நிலை இதுவென்றால், கழிவு நீர் அகற்று வாரியத்தின் கீழ் உள்ள சாக்கடையில் அடைப்பு எடுக்கும் பணியாளர்களின் நிலை இதனினும் இழிவாக உள்ளது. “காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு” என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.

தொழிலாளிகள் இறந்து போனால் அவர்களுக்கான நிவாரணமோ, ஓய்வூதியமோ இவர்களுக்கு கிடைப்பதில்லை. கழிவு நீர் அகற்று வாரியம் இந்த வேலைகளை ஒப்பந்தத்திற்கு விட்டுவிட்டது. இன்றும் நாம் சாலைகளில் உள்ள சாக்கடையில் மூழ்கி கழிவுகளை அகற்றுபவரை நாள்தோறும் காண முடியும். மக்கள் தொகை குறைவாக இருந்தபோது தெருக்களில் 6 அங்குல குழாய்களும், பெரிய சாலைகளில் 9 மற்றும் 12 அங்குல குழாய்களும் புதைக்கப்பட்டன. இன்று மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகின்றன.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு சிந்திப்பதில்லை. கழிவுகளை உந்தி அனுப்பும் பம்பிங் நிலையங்களை அரசு தனியாருக்கு கொடுத்துவிட்டது. அரசு இதனை நடத்திய போது 24 மணி நேரமும் எந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் அடைப்புகள் குறைவாக ஏற்பட்டது. தனியாரிடம் கொடுத்த பிறகு அவர்கள் செலவு அதிகம் ஆகும் என்று கூறி எந்திரங்களை முழுமையாக இயக்குவதுமில்லை, பராமரிப்பதும் இல்லை.

இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு, துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடைக்குள் இறங்கும் அவலமும் ஏற்படுகிறது. தனியார் செய்யும் இந்த ஊழலை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, மக்களிடமிருந்து வரியை மட்டும் சரியாக வாங்கிவிடுகிறது.

ஒப்பந்தக்காரர்கள் சாக்கடையில் மூழ்குபவரை மனிதர்களாகவே கருதுவதில்லை. அவர்களை மிரட்டி வேலை வாங்குவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் வழங்குவதுமில்லை. மூழ்கும் வேலைக்கு ஆட்களை அரசு தேர்வு செய்யும் போது, 35 வினாடிகள் ஒருவர் சாக்கடையில் மூழ்கி இருந்து அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றால் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் அவ்வாறு எதையும் செய்வதில்லை. யார் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு வருகிறார்களோ, அவர்களைப் பணியில் அமர்த்திக் கொண்டு சுரண்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல, சாக்கடையை திறந்த உடன் சிறிது நேரம் வாயு வெளியேற அவகாசம் கொடுக்க வேண்டும்; அதன் பிறகு தான் அதில் இறங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று பணம் சம்பாதிக்கும் ஆசையில் திறந்த உடனேயே இறங்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். வாயு வெளியேறும் முன்பு உள்ளே இறங்குவதால் பலரின் உயிர் பறிபோகிறது.

மருத்துவ வசதிகளை ஒப்பந்ததாரர்கள் முழுமையாக செய்வதில்லை. தொழிலாளர்களுக்கு தொடர் உடல் பரிசோதனையும் இல்லை. மூழ்கி இறந்து போனவர்கள் அத்தனை பேருமே 19 வயதில் இருந்து 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான வேலை செய்யும் இவர்களுக்கு, மருத்துவ செலவாக ஒப்பந்ததாரர் ஆண்டுக்கு வெறும் 100 ரூபாய் செலவிடுகிறார். அதாவது ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஜனதா திட்டத்தில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க ஆண்டுக்கு 100 ரூபாய். இதனை ஒப்பந்ததாரர்கள் எடுத்துவிடுவார்கள். அத்தோடு அவர்களின் கடமை முடிந்தது. தொழிலாளி இறந்தால் ரூபாய் 1 லட்சமும், அடிபட்டால் ரூபாய் 25 ஆயிரமும் இதன் மூலம் கிடைக்கும். போனஸ் போன்ற கூடுதல் பயன்களைப் பெற முடியாது. இதனால் தொழிலாளிக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு எதுவுமில்லை.

செய்த வேலைக்கு கூலியாவது ஒழுங்காக கொடுக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை. “பீ தண்ணியில இறங்கி காலைல 8 மணியில இருந்து சாயங்காலம் 7 மணி வரைக்கும் வேலை செய்றோம். கூலி கேட்டா வூட்டாண்ட வான்னு சொல்லுவாங்க. அங்க போயி அவுங்க வாசல்ல நிக்கணும். என்னான்னே கேக்க மாட்டாங்க. நாலஞ்சி முறை நடக்க உட்டு தான் தருவாங்க. அதையும் முழுசா குடுக்க மாட்டாங்க. வேல இருக்கு அப்புறம் வான்னு சொல்லுவாங்க. போனா இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிடுவாங்க. போய்ட்டு வந்த செலவு தான் மிச்சம்” என்கிறார் முருகன்.

தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறையோடு தொடர்ந்து செயல்படும் இந்தியக் குடியரசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன், “கையால் மலம் அள்ளுபவர்களுக்கு பொதுமக்களிடம் எந்த மரியாதையும் இல்லை. இந்த மக்களுக்கு துரோகம் மட்டுமே இழைக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு யாரும் வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை. அரசு கட்டும் தொகுப்பு வீடுகளில் 25 சதவிகிதம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளதால், அவர்களை கலந்தாலோசித்த பின்னரே விதிமுறைகளை வகுக்க வேண்டும். தொழிலாளர்கள் மேலதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று முன்பு விதி இருந்தது. ஆனால் இப்போது துன்புறுத்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக விதியை மாற்றியுள்ளனர். இது எப்படி சாத்தியம்? இது மாற்றப்பட்டாக வேண்டும்” என்கிறார்.

கையால் மலம் அள்ளுவதற்கு தடைச் சட்டம் உள்ளது. ஆனால்,தினமும் சாக்கடையில் தலை வரை மூழ்கி, வாயில் மலம் சென்றுவிடும் கொடுமைக்கு தடை விதிக்க சட்டம் உள்ளதா? ‘சபாய் கரம்சாரி அந்தோலன்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் பெசவாடா வில்சனிடம் இது குறித்து கேட்டோம். “உலர் கழிப்பறைகள் கட்டுவதற்கு மட்டுமே 1993ஆம் ஆண்டு சட்டம். எனவே அந்த விஷயத்திலேயே அதிக கவனம் குவிக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களின் வாழ்நிலை மற்றும் பணிநிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்தப் பணிக்கு மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறியது. இதனை குஜராத் அரசும் ஏற்றுக் கொண்டது. இக்குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாடு முழுக்க நடைமுறைப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கையால் மலம் அள்ளுவதே இழிவான செயல் எனில், மலத்திலே மூழ்கி எழுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதனை ஒழிக்க சட்டமே தேவையில்லை. சக மனிதர்கள் இதனை உணர்ந்தாலே போதும். ஆனால் யாரும் உணராமல் இருப்பதுதான் பிரச்சனை.

எந்த காரணத்தைக் கொண்டும் சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கக்கூடாது. புதிய நவீன கருவிகள் அடைப்பு எடுக்க வந்துவிட்டன. அதனை போதிய அளவு வாங்க வேண்டும். அரசின் ஒவ்வொரு துறைக்குள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பிரிவு இருக்கும். இந்தப்பிரிவு துறையின் வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகளையும், ஆய்வுகளையும் செய்யும். இதுபோன்ற ஓர் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு தூய்மைப் பணியாளர்கள் துறையில் இல்லை. அந்தத் தொழிலில் நவீன வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், இந்தப் பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய திட்டக்குழுவிடம் சபாய் கரம்சாரி அந்தோலன் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

தொடக்க காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதினோம். பின்னர் பேனாவில் எழுதினோம். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தட்டச்சு எந்திரத்தைப் பயன்படுத்தினோம். இப்போது இன்னும் நவீனமாக கணினி வந்துவிட்டது. ஆனால் சாக்கடை அள்ளுவதில் மட்டும் எந்த நவீன மாற்றமும் ஏற்படாமல் இருக்க என்ன காரணம்?” என்ற அவரின் கேள்வியைத் தான் நேர்மையற்ற அரசின் முன்பும் மக்கள் சமூகத்தின் முன்பும் நாம் வைக்க விரும்புகிறோம்.

http://www.keetru.com/dalithmurasu/jul08/anathma.php

August 27, 2008 Posted by | இழிவு, மதம் | , | Leave a comment