திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் ராசபக்சே உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் விபரம் வருமாறு,
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும் , அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக இன வெறியன் ராசபக்சே உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்
சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்……….அடித்தது யார்?…….அடி வாங்கியது?……….ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?………..எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?……………..என்பது மிகப்பெரிய ஐயம்.
(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என் திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)
அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை
“தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.
தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன், மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.
அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர் ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,
அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!
இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்…………………………….
இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,
இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.
பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்
1) சமூக அக்கறை பெறட்டும் சொல்லட்டும்,
2) சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு
பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.
## ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!
## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!
தொடர்புடைய பதிவுகள் :
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
ராசபக்சே உருவப்பட எரிப்பு
நாம் தமிழர்கள்…………?
ஒரே மொழிதான்
ஆனாலும்-
நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.
ஒரே ஊர்தான்
ஆனால்-
நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை
ஒரே பண்டிகைதான்
ஆனால்-
நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை
ஒரே மதம்தான்
ஆனால்-
நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை…
நம் இடையினில் இருப்பது
சாதி தோழா.
நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்
நியுயார்க்கிலிருந்து மிரட்டல்
உலகத்தமிழ் மாநாட்டிற்கு நியுயார்க் தமிழ்ச்சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தங்களுடைய கருத்தை மின்னஞ்சல்(nytamilsangham@gmail.com) மூலமாகவோ, தொலைப்பேசி((718)-969-1310)) மூலமாகவோ கருத்தை பதிவு செய்யுமாறு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.
கூடவே இந்த இணைப்பும் சேர்ந்தே வந்தது.
http://www.facebook.com/n/?inbox/readmessage.php&t=1144658613759&mid=124459eG26ac0379G2a26b64G0
நானும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கீழ்க்கண்டவாறு செப்.23 ஆம் தேதி
உங்களின் உலகத்தமிழ் மாநாட்டிற்கான ஆதரவுக்கு நன்றி………..
இப்படியே மாநாடு நடத்தி தமிழர்களுக்கு இருக்கும் மீதி உணர்வுகளையும் அழித்து விடுங்கள்….
உங்கள் வரலாற்று துரோகங்களுக்கு உளப்பூர்வமான நன்றி
—
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
http://periyaryouth.blogspot.com
https://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com
நேற்று அதிகாலை செப்.25’09 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 7:32 மணிக்கு +6146545155 என்ற எண்ணிலிருந்து 06:58 விநாடிகள் ஒரே மிரட்டல்.
சொற்கள் அத்தனையும் முழுமையாக நினைவிலில்லை,ஏனென்றால் நான் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. ஆனால், ஒருச்சில நினைவில் இருக்கின்றன….அவற்றை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
“சைபர் கிரைமில் உள்ளே தள்ளிடுவேன்.”
“மும்பை கமிசனரை எனக்கு தெரியும்”
“புலி ஆதரவாளர்னு முத்திரை குத்திடுவேன்.”
“அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்.”
“உன்னை காப்பாத்த பெரியாரும் வரமாட்டார், வீரமணியும் வரமாட்டார்.”
“கருணாநிதி மேல அவ்வளவு கோபம் இருந்தால், குண்ட கட்டிக்கிட்டு விழுந்து அவரை கொல்ல வேண்டியதுதானே.”
“பார்ப்பான், பார்ப்பான்னு திட்டி எழுதிறியே உங்க ஆட்கள்தானே ஆட்சியிலே இருக்கிறாங்க, ஏன் இலங்கை மக்களை காப்பாத்த முடியலை.”
இவ்வளவையும் கேட்டுவிட்டு நான் கூறியதை…
“ உங்கள் கோபம் தணிவதற்காகத்தான் இவ்வளவும் கேட்டுக் கொண்டேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நான் வீரமணி ஆதரவாளர்னு யார் சொன்னா….?”
எவ்வளவு நகைச்சுவை பார்த்தீர்களா?பார்ப்பான்னு நான் என்றோ திட்டி எழுதியதை நினைவில் வைத்து, பார்ப்பான் என்றே குறிப்பிடாது எழுதிய மின்னஞ்சலில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என்ன துணிவு, அறிவுடமை? பார்ப்பனீயத்தை கடைப்பிடிக்காதவனுக்கு பார்ப்பான் என்ற சொல் ஏன் குத்தி குடைய வேண்டும். பார்ப்பனீயத்தை அப்படித்தான் கடைபிடிப்பேன் என்றால் , நானும் அப்படித்தான் இன்னும் உறுதியோடு பார்ப்பான் என்றே எழுதுவேன். பார்ப்பனீயம் வீழும் வரை எழுதுவேன், களமாடுவேன்.
அதோடு புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடுவானாம், நான் புலி ஆதரவாளர் என்று இவருக்கு எப்படி தெரியும், நான் ஈழத்தமிழ் மக்களை ஆதரிக்கிறேன், அவர்கள் புலிகளை ஆதரித்தால் நான் என்ன செய்வது. A=B=C மாதிரி ஆகின்றது, நான் என் செய்வது.
எம் சகோதரர்கள் தானாகவா ஆயுதமேந்த தொடங்கினார்களா என்ன ? ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள், சிங்கள இன வெறியால் ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள்.என் சகோதரர்கள் சொந்த நாட்டில் உரிமையோடு மகிழ்ச்சியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான் ஆயுதமேந்தினார்கள். தம் வாழ்வின் அமைதிக்காகத்தான் ஆயுமேந்தினார்கள். புலிகள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் அதை சுட்டிக்காட்ட இந்திய வல்லாதிக்கத்திற்கு தகுதி கிடையாது.
இன்னும் குறிப்பாக எந்த பார்ப்பன பண்டாரத்தின் வழித்தோன்றல்களுக்கும் தகுதி கிடையாது. பார்ப்பன வழித்தோன்றல்கள் தங்கள் முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது செய்த கொடுமைகளை வரலாற்றின் பக்கங்களில் புரட்டி பார்த்து தெரிந்து கொண்டால் தாங்கள் செய்த பிழையின் தன்மையும் கணமும் புரிய வரும். இன்றும் இடஒதுக்கீட்டினை தங்களின் முன்னோர்கள் செய்த தவற்றை திருத்தி கொள்ளும் வாய்ப்பாக பார்க்காமல் இடஒதுக்கீட்டை பார்ப்பன பண்டாரங்கள் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ விமர்சிக்க தகுதியற்றவர்கள்…
புலிகளின் சகோதரர்கள், ஈழத்து உறவுகள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது…தின்று கொழுத்த கூட்டம் கண்டிப்பாக விமர்சிக்க கூடாது
இங்கு ஆட்சி செய்பவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடும் கொள்ளைக்காரர்கள். இவர்கள் தாம் மடிந்தாலும் திருந்த போவதில்லை. அப்படியிருக்க புலிகளை மட்டுமல்ல, சாக்கடையில் ஓடும் எலியை கூட இவர்கள் விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளாது.
எம் சகோதரர்களை நாங்கள் விமர்சிப்போம், அவர்களிடம் பிழைகள் இருந்தால் நாங்கள் திருத்துவோம், முடிந்தால் மென்மையாக, இல்லையென்றால் உரிமையோடு வன்மையாக சொல்வோம். எங்களுக்கு எவனும் கற்றுத்தர தேவையில்லை. மிரட்டுபுவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் சு………..சாமியையும், சோ…….சாமியையும் மிரட்டட்டும்….
நாங்கள் பெரியார் விதைத்த விதைகள், இம்மண்ணுக்காக மக்களுக்காக போராட களம் வந்து விட்டோம்,. இந்த சிறு பிள்ளைத்தனமாக அழுமூஞ்சி மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம். மாறாக, மிரட்டல்கள் எங்களை கூர்தீட்டும். எங்களை பொருத்தவரை நாங்கள் மனிதர்கள் புலிகள் இல்லை, தமிழர்களுக்காக ஈழத்தில் தீரத்தோடு போராடிய இயக்கங்களுள் முதன்மையான இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கதில் மனிதர்கள் இருந்தார்கள், தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து தம் மண்ணுக்காக போராடினார்கள்.
“முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவன் சிங்களவன், பின்னர்தான் புலிகள். அடித்தவனுக்கு அடிவாங்கியவனுக்கு அடிப்படை வேறுபாடு உண்டல்லவா?”
சேகுவேரா கூறியது போல “ உலகத்தில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும், என் உள்ளம் துடிக்கும்,ஏனென்றால் நான் சே வின் தோழன்.”
சிறை என்னை நான்கு சுவற்றுக்குள் கைது செய்யலாம், வரலாறு என்னை விடுதலை செய்யும்(பிடல் காஸ்ட்ரோ), என் கருத்தை விடுதலை செய்யும்.
புலிகளை ஆதரிக்கிறேனா? என்றால் ஆதரிக்கவில்லை, பாதுகாக்க வில்லை என்றால்தான் அது குற்றம். ஏனென்றால், அது இந்தியாவின் தேசிய விலங்கு.
எழுத்துப் பிழைகள் இருக்கலாம், இருந்தால் மன்னிக்கவும் அவசரத்தில்எழுதியது
கொலை வாளினை எடடா! தமிழா!
மையத்தில் பேராய காங்கிரசு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் பெரியாரின் கொள்கைகளுக்கு காயடிக்கும், மக்களை தேர்ந்த ஏமாளிகளாக்கும் திமுகவின் ஆட்சி. மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, இனத்தை காட்டிக் கொடுத்து, வடநாட்டு பனியாக்களிடம் தமிழனின் வாழ்வுரிமையை பறித்து கொடுத்து, லஞ்சத்தை கூட்டிக்கொடுக்கும் கூட்டத்திடம் இனமானத்தை விட்டுக்கொடுத்து………….கொலைக்கார காங்கிரசின் கையிடம் கள்ள மௌனத்தோடு கள்ள உறவு கொண்டு மீண்டும் வருகிறது அதே கூட்டம், ஒட்டுச்சேர்க்க…………
தமிழர்கள் முட்டாள்கள் ரொம்ப நல்லவர்கள்,எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது போல நடிப்பார்கள்………என்ற ரீதியில் உலகத் தமிழ் மாநாடு…..இன்றைய சூழ்நிலையில் அந்த மாநாட்டை நிறுத்த முடியாவிட்டாலும்……தோழர்களே உங்கள் கோபத்தை தணித்து கொள்ளாதீர்கள்….பாவேந்தனின் வரிகளில் இருக்கும் செஞ்சினத்தை சிந்தைக்கு ஏற்றுங்கள். நாளை நம் நாள் என்று கனியும் வரை இளைஞர்களிடம் உங்கள் நியாயமான சினத்தை பரப்புங்கள்………..
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே
விழி தமிழா!
கலையேவளர்! தொழில் மேவிடு!
கவிதைபுணை தமிழா!
கடலேநிகர் படை சேர்கடு
விடநேர்கரு விகள் சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நீதிநூல்விளை! உயிர் நூல் உரை
நிசநூல் மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம் வானிலும்
அணி மாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவே முரசரைவாய்!
இலையே உண விலையே கதி
இலையே எனும் எளிமை
இனிமேலிலை எனவே முர
சறைவாய் முரசறைவாய்!
கலைஞரின் துதிபாடி கவிஞர்களே இந்த கவிஞனையும் கொஞ்சம் படித்து பாருங்கள்
சோவியத்தில் வாழ்ந்த பாரதிதாசன்
தமிழகத்தில் எப்படி ஒரு புரட்சி கவிஞன் பாரதிதாசன் தோன்றித் தமிழ்தேச பற்றை ஊட்டினானோ, அது போல் ருசியப்ப்பெரிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்த தாஜிக்கிஸ்தான் பகுதியில் அவார் என்னும் கிளைமொழியின் பெருமையைப் பாடிய பாவலன்தான் ரசூல் கம்ஸா தோவ்
அவன் ருஷ்ய தேசியம் பாடவில்லை. அவன் தன் தாய்மண் பற்றினை ஆவேசம் மிகுந்த சொற்களைக் கொண்டு கவிக்கனலை தோற்றுவித்தான். அவன் தன் தாய்நாட்டுக்காக பாடியதால் ருஷ்ய தேசியம் அவனை வெறுக்கவில்லை, மாறாக அவனை புகழ்ந்தது, அரசே அவனது வெளியீடுகளை வெளியிட்டது. அவனை வெறும் கவிஞனாக மட்டும் கருதாது. தாஜிக்கிஸ்தான் அரசாங்கம் நிர்வாகத்தில் பங்கு கொள்ள வைத்தது. தாஜிக்கிஸ்தான் – இந்தியா, சினா போன்ற கிழக்கத்திய பண்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இம்மாநிலத்தில் (அல்ல நாட்டில்) பல மொழிகளில் வழங்கி வந்தன. அவற்றுள் ஒன்றே அவார் மொழி! அந்த மொழிக்கு உரிமையவனே ரசூல் காம்தோவ்.
அவன் எழுதுகிறான்….
ஓ..என் அருமை மிகு அவார் மொழியே!
நான் வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் தொங்கி திணறும்போது
உலகத்து மருந்துகள்
என்னை காப்பாற்றாது!
உலக மருத்துவரும் காப்பாற்ற மாட்டார்கள்!
ஆனால், அவார் மொழியே!
உன் இனிமை சொல்லே
என்னை காப்பாற்றும்!
அவன் மேலும் தொடர்கிறான்; பாடுகிறான்;
உலகின் பிற மொழிகளுக்கு
எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம்!
ஆனால்-
அவைகளில் நான் வாய்விட்டுப் பாடமுடியாது!
எம்மொழி வீழும் நாள், நாளை என்றால்,
இன்றே சாவு எனக்கு வரட்டும்!
பின்னர் சாவு அங்கே போகட்டும்!
பாவேந்தர் பாரதிதாசன் ‘எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்! தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்.என்று வஞ்சினம் கூறியதைப் போல், ரசூல் கூறுகிறான்.
சுதந்திர தாஜிக்கிஸ்தானே!எழில் மலர்கள்
பூத்துக் குலுங்கும் நாடே!
நீ என் முகம்!
எப்பகைவனும் உன் மீது கைவைக்க விடமாட்டேன்.
உன்னை இழிவாக வசைபாடினும்
நான் தாங்கிக் கொள்வேன்.
எனது தாஜிக்கிஸ்தானை ஒரு இழி சொல் தொட விடமாட்டேன்.
நீ என் காதலி!
நீ என் சபதம்!
நீயே என் வழிபாட்டு குரியை!
உன் இறந்த, நிகழும் எதிர்காலங்கள் எல்லாம்
என்னோடே!
அதை யாரும் பிரிக்கவியலாது!
பாவேந்தனை போல் மொழி, நாடு பற்றிக் கோபுரத்தில் ஏறிக் குரல் கொடுத்தவன் ரசூல். அவன் தன் இனம் பற்றிப் பாடுகிறான்.
நான் அவார் இனத்தவன்!
நான் கண் திறந்தேன்!
அவார் மக்களைப் பார்த்தேன்
அவார் பேசும் மொழியைக் கேட்டேன்!
என் தாய் அவார் மொழித் தாலாட்டுப்
பாடினார்!
பார்த்தும், கேட்டும், நுகர்ந்ததும்
அவார் அல்லவா? இது என் சொத்து!
ஆம், நான் ஒரு அவார்?
உணர்ச்சிப் பிழம்பாய் வாழ்ந்த ரசூல் தன் தாய்மொழி விரிந்து பரவவில்லையே என்று கவலை கொள்ளவில்லை. இலக்கண, இலக்கியங்கள் நிறைய இல்லையே என்று வருந்தவில்லை.
எனது இதயம் எப்பொழுதும்
என் மொழி பற்றியே எண்ணுகிறது!
பொதுச்சட்ட மன்றில்
(பாராளுமன்றத்தில் தமிழுக்கு இடமில்லாதது போல முழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் போல)….அதுவே என் உயர்மொழி!என்கிறான்
பெல்ஜியத்தில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு ரசூல் செல்கிறார். அங்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள கவிஞர்கள், தங்கள் தங்கள் பண்பாடு பற்றிக் கூறினர். ஒரே ஒரு கவிஞன் கனவான்களை! நீங்கள் பல தேசங்களிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் பல மக்களின் பிரதிநிதிகள்! ஆனால் நான் எந்நாட்டின் பிரதிநிதி அல்லன். நான் கவிதையின் பிரதிநிதி. எல்லா நாடுகளின் பிரதிநிதி! நானே கவிதை…என்று கூறிய கவிஞனைக் கட்டித் தழுவினார்கள்! ரசூலைப் பாராட்டியப் பெருமைப்படுத்தினர். தனது சொந்த மண்ணிற்குப் பிரதிநிதியாக முடியாதவன், இந்தப் பூமிக்குப் பிரதிநிதியாக முடியாது என்றான் கம்சதோவ்!
அவன் மேலும் கூறுகிறான்,
ஒருவன் நாட்டில் குடியேறி
அங்குள்ள பெண்ணை மணந்து வாழலாம்!
தாய் மண்ணில் தாய் இருக்கலாம்!
மனைவியின் தாய் தாயாவாளா?
தாஜிக்கிஸ்தான் – அவார் நாட்டில் மொழிப்பற்று எப்படி ஓங்கி வளர்ந்துள்ளது,என்பதை ரசூல் ஒரு நிகழ்ச்சியால் விவரிக்கிறார் பாருங்கள்.
ரசூல் வெளிநாடு சென்றிருந்தார். அங்கே தன் அவார் இனத்து நண்பன் ஒருவனை அவனது இல்லத்தில் சந்திக்கச் சென்றார். பிறகு நாடு திரும்புகிறார். ரசூலைப் பார்க்கவும். தன் மகனின் நலம் விசாரிக்கவும் பெற்ற தாய் வருகிறார்
ரசூல் கூறினார். அவனது வளமிக்க வாழ்வு பற்றியும், செழுமை மிக்க தோற்றம் பற்றியும்,
அந்த தாய் ‘ரசூல் நிறுத்து’என்றாள்.
‘ஏன்?’என்றாள் ரசூல்.
அவார் இனத்தவனாகிய என் மகன், உன்னுடன் அவார் மொழியில் பேசினானா? என்று கேட்டாள்.
‘இல்லை, வேறு மொழியில்!’என்றான்.
உடனே அந்தத்தாய், ‘நான் பெற்று வளர்த்த மகன், நான் சொல்லித் தந்த அவார் மொழியை மறக்க முடியாது. ஆகவெ என் மகனாக அவன் இருக்க முடியாது,’என்று கூறி விட்டுக் கறுப்புத் துணியால் முக்காடிட்டு, ‘ரசூல்! என் மகன் இறந்து வெகு நாளாயிற்று’என்றாள்.
இத்தகைய தாய்மார்களே, புறநானாற்றுத் தாயர் ஆவார்.
நினைத்துப் பாருங்கள்.
தமிழகத் தருதலைகள் பல வெளிநாடுகளில் குடியேறி, நாகரீகத் திமிரால் தமிழையே மறந்தும், பேசுவதற்கு நாணப்பட்டும் இருப்பதை.
அவார்த் தாயின் உணர்வை நம் தாயர்கள் பெறுக!!
அதோடு உணர்வுள்ள நல்ல படைப்பாளிகளையும் பிள்ளைகளையும் பெறுக!!!
அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!
மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசுகொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?
நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது “தம்பிமார்கள்’ பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார் மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி “கண்ணீர்த்துளி’களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.
தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று பித்தலாட்டமாடினார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் “திராவிட நாடு” என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்றும் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்றும் அண்ணாதுரை மேடை எங்கும் முழங்கி வந்தார். இவர் கேட்ட திராவிட நாட்டின் எல்லைகளைக் கூட இவர் சரியாகச் சொன்னதில்லை. சில சமயங்களில் பழைய சென்னை மாகாணமே “திராவிட நாடு’ என்றார். ஆந்திரம் தனி மாநிலமான பிறகும் கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் திராவிட நாடென்றார். ஆனால் பரிதாபம் என்ன என்றால், இவர் திராவிடநாடு கேட்டது மற்ற 3 மாநிலத்திற்கும் தெரியாது. இறுதிவரை திராவிட நாட்டைப் பறித்தெடுக்க எந்த செயல்திட்டமோ, வரையறையோ அவர் எழுதிக்கூட வைத்திருக்கவில்லை.
தேச விடுதலைக்கு வேட்டுமுறை, ஓட்டுமுறை என இரண்டு இருப்பதாகவும், திராவிட நாட்டை ஓட்டுமுறை மூலமாகப் பாராளுமன்றத்தில் சென்று பெற்றுவிடுவேன் என்றும் சொன்னார். ஐ.நா. சபையில் பேசி வென்றெடுப்பேன் என்றார். “ரஷ்யாவுக்கு சென்றால் அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை ஆதரிப்பார்கள்” என்றும் பிதற்றினார். “தணிக்கை இல்லாமல் 4 சினிமா எடுக்கவிட்டால், அடைவோம் திராவிடநாடு” என்று அவர் பேசிய பேச்சும், எந்தத் தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கையை அவர் முன்வைக்காததும் இக்கோரிக்கையினை மூக்குப் பொடி போலத்தான் பயன்படுத்தி வந்தார் என்பதனை நிரூபிக்கும் சாட்சியங்கள்.
சீனப்போர் உச்சமடைந்தபோது மத்திய அரசு எங்கே தனது கட்சியைத் தடை செய்து விடுமோ என அஞ்சி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனாலும், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.
இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேறிய 1963ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கெதிராகப் போராடப் போவதாக அண்ணா அறிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு இந்தி ஆட்சி மொழிச் சட்ட நகல் எரிப்புப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களும் அணிகளும் அன்றைய காங்கிரசு அரசால் சிறையிடப்பட்டனர். இறுதியாக, 1965 ஜனவரி 26 “குடியரசு’ நாளை இந்தி ஆட்சி மொழியாகும் துக்கநாளாக அறிவித்து கருப்புக் கொடியேற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறை எதிர் கொண்டு போராடினர். இவ்வாறு, பல ஆக்கபூர்வ பணிகளால் தமிழ்மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள் பிரச்சாரங்களால் மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டி, தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கமும், குறிப்பாக அண்ணாதுரையும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஆனால், அப்போராட்டம் அத் துக்கநாளோடு முடிந்து போனது. மொழியுரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தியாகிகளின் கல்லறையிலேயே அண்ணாவும் தி.மு.க.வும் தமது மொழிப் பற்றையும் இன உணர்வையும் வைத்துச் சமாதி கட்டிவிட்டனர். மொழிப்போரின் பலன்களை 1967 தேர்தலில் அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்தில், அண்ணாவும் அவரது கழகமும் துரோகப் பாதையில் நடைபோடத் தொடங்கினர்.
மொழிப்பற்றாலும் மொழியுணர்வாலும் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25ஆம் நாளை, மாநிலந்தழுவிய துக்க நாளாக அறிவித்து, பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, இந்தி அரக்கி எரிப்பு ஊர்வலம் என பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாராத மாணவர்கள் தன்னெழுச்சியாகவும் தி.மு.க. மாணவர் அணியினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு அரசு காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மொழிப்போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அஞ்சல் நிலைய மறியல், இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம் இந்திப் பிரச்சார பாடப் புத்தகங்கள் எரிப்பு என போராட்டங்களைத் தொடர்ந்தனர். காங்கிரசு அரசு தமிழகத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி மாணவர்களை மிருகத்தனமாகப் படுகொலை செய்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த தமிழக மக்கள் மாணவர்களோடு இணைந்து மொழிப் போரில் குதித்தனர். போலீசுக்கு எதிரான தாக்குதலிலும், அஞ்சல் நிலையங்கள் இரயில் நிலையங்களைத் தீயிடலிலும் இறங்கினர். இதுவரை கண்டிராத மாபெரும் எழுச்சியை தமிழகம் கண்டது.
இத்தருணத்தில் மாணவர்களோடும் மக்களோடும் களத்தில் நிற்க வேண்டிய அண்ணாவும் அவரது கழகமும், “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அறிவித்து வெளிப்படையாகவே துரோகமிழைத்தனர். கழகத்தின் முக்கிய தலைவர்கள் பலர் “மன்னிப்பு’ எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையடைந்தனர். எவ்விதத் தீர்வும் காணாமல் “இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது” என்ற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை அண்ணாதுரையும் அவரது கட்சியினரும் விலக்கிக் கொண்டனர்.
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் மொழியுரிமையும் ஒன்றோடொன்று இணைந்தது. தன்னுரிமையை தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத்தன்மையை ஏற்றுக் கொண்டு அண்ணாவும் அவரது கழகமும் துரோகமிழைத்த பிறகு, மொழியுரிமை போராட்டம் என்பது அவர்கள் நடத்தும் நிழல் சண்டையாகிப் போனது.
ஆரம்பத்தில் தி.மு.க.வை ஓட்டுப்பொறுக்கும் கட்சி எனும் சாயல் விழாமல் பார்த்துக் கொண்ட அண்ணாதுரை, 1957இல் நடந்த தேர்தல் மாநாட்டில் “தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா?’ என்பதனை வாக்கெடுப்பிற்கு விட்டு பெரும்பான்மையின் முடிவின்படி தேர்தலில் பங்கெடுத்தாராம். ஆனால் மாநாட்டுக்கு முன்பே “புதியதோர் அரசு காணப் புறப்படுவோம்’ என்று தம்பிமார்களுக்கு வெட்கத்தைவிட்டு பதவி ஆசையைச் சொன்ன மனிதர்தான் அவர்.
தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார். 1957இல் முதுகுளத்தூர் கலவரத்தின்போது தேவர்சாதி வாக்குகளையும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையும் மனத்தில் கொண்டு, அப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தேவருக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்து தாழ்த்தப்பட்டோரை ஆதரித்தார்.
கட்சிமாறி அரசியலுக்கு ஆதிமூலமான “மூதறிஞர்’ ராஜாஜியை “குல்லுகப் பட்டர்’ எனச் சாடியவர், 1962 தேர்தலிலே “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை” எனும் பொன்மொழியைச் சொல்லி கூட்டணி சேர்ந்தார். அத்துடன் தி.மு.க.வில் இருந்து பார்ப்பன எதிர்ப்பும் கழற்றி விடப்பட்டது. அந்தத் தேர்தலிலே காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை, வாக்காளர் பட்டியலில் தன்னை “அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்து சாதி அரசியல் செய்ய முயன்றார். “சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது” என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.
1967இல் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், கம்யூனிசத்தின் எதிரி ராஜாஜியுடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி கட்டி பதவிக்காக எதையும் செய்யலாம் எனும் நிலை எடுத்தார், அண்ணா. “எங்களுக்கெல்லாம் கொள்கைதான் வேட்டி. பதவியோ மேல்துண்டு” எனத் தத்துவம் பேசியவர், ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.
நெருக்கடி நிலையில் தன் கட்சித் தொண்டர்களைத் தூக்கிப் போட்டு மிதித்த இந்திரா காந்தியுடன் அடுத்த தேர்தலிலேயே “நேருவின் மகளே வருக” என அழைத்து தி.மு.க. கூட்டணி கட்டியதும், பொடாவிலே தன்னைத் தள்ளி வதைத்த ஊழல்ராணியை “அன்புச் சகோதரி’யாக வை.கோ. அரவணைத்ததும் அண்ணா தந்த தத்துவம்தான்.
“தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ என இந்துமதவெறியர் வாஜ்பேயியை அண்ணாவின் தம்பி சித்தரித்ததும், அவருடனேயே கூட்டணி அமைத்ததும் வேறு ஒன்றுமல்ல. அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ எனும் தத்துவம்(!)தான்.
அரசியலில் பிழைப்புவாதத்துடன் கவர்ச்சிவாதத்தையும் கலந்து ஊட்டி வளர்த்த அண்ணா கொள்கைகளை எல்லாம் இழந்த பின்னர் எம்.ஜி.ஆர். எனும் கவர்ச்சியை நம்பியே கூட்டம் கூட்டினார். அதற்காக “ஆளைக்காட்டினால் ஐம்பாதியிரம் கூடும். முகத்தைக்காட்டினால் முப்பதாயிரம் கூடும்” எனும் அரசியலை வெளிப்படையாகக் கூறவும் அண்ணா கூச்சப்படவில்லை. சென்ற தேர்தலிலே தி.மு.க. அ.தி.மு.க. இரண்டுமே சினிமாத் துணை நடிகைகளை வைத்துக் குத்தாட்டம் நடத்திக் கூட்டம் சேர்த்ததும் அண்ணாவின் அரசியல் தத்துவம்தான்.
கோஷ்டி சண்டையினைக் கொம்புசீவி விட்டுத் தனக்கு இணையாக வளரும் தலைவர்களை அடியாட்களால் அடித்து நொறுக்குவதைக் கழக அரசியலில் அறிமுகம் செய்தவர் அண்ணா. ஈ.வெ.கி. சம்பத் தாக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டதும் அதனை சாமர்த்தியமாக “காதிலே புண் வந்திருக்கிறது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்” எனப் பேசியும், உண்ணாவிரதம் இருந்த சம்பத்துக்கு பழரசம் கொடுத்து சமாளிக்கப் பார்த்தும், கட்சிக்குள் நாறிக்கிடந்த கோஷ்டிச் சண்டையைத் தெருவுக்குக் கொண்டு வரத்தான் செய்தது. அண்ணாவின் தம்பிகள் இதனை தா.கிருஷ்ணன் கொலை வரை செவ்வனே செய்து வருகின்றனர்.
அண்ணாவின் பொருளாதாரக்கொள்கை என்ன என்பதைப் படித்தால் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட விழுந்து விழுந்து சிரிப்பார்கள். “உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.
வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது. அடிமுட்டாள்தனமான பொருளாதாரத் தத்துவத்தை சொன்னவரோ “பேரறிஞர்’ எனும் பட்டமும் பெற்றார். இவர் முதல்வரான பின்னர் கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் கொளுத்தப்பட்டனர். அப்போது இந்த ‘உண்மையான’ கம்யூனிஸ்டால் பல் விளக்காமல் காலையில் அழமட்டுமே முடிந்தது.
கற்புக்கரசி கண்ணகி என்று தமிழ்நாட்டுக்கு ஒரு சீதையை உயர்த்திப் பிடித்த அண்ணாவின் அத்தனை தம்பிமாரும் கோவலன்களாகி ஒழுக்கக்கேட்டில் மூழ்கிக் கிடந்தார்கள். அண்ணாவும் விதிவிலக்கல்ல. இந்தக் கேடுகெட்ட போக்கினை “நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல. அவள் படிதாண்டா பத்தினியுமல்ல” என கூச்சநாச்சமின்றி இப்”பேரறிஞர்’ விளக்கம் வேறு தந்தார்.
எல்லோரிடமும் நல்லவர் என்று பேரெடுக்க “எதையும் தாங்கும் இதயம்’ பெற்றிருந்த (அதாவது சுயமரியாதையை இழந்து நின்ற) அண்ணா இறந்ததும், தி.மு.க. தலைமையே திணறிப் போய்விட்டது. அண்ணாவே எல்லாவற்றையும் உதறிவிட்ட பின்னர், இனி எதைக் கொள்கை என்று சொல்வது? ரொம்ப நாள் யோசித்து ஒரு கொள்கையைத் தி.மு.க. அறிவித்தது. அது “அண்ணா வழியில் அயராது உழைப்போம்!” இவ்வாறு 70களில் வெறும் முழக்கமே கொள்கையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. 90களிலோ மூஞ்சிகளே கொள்கைகளாகி “கலைஞர்’, “தளபதி’ என மாறிப்போனது. அவர் உருவாக்கிய கழகமோ பல கூறுகளாகி பாசிச காங்கிரசோடும் இந்துவெறி பார்ப்பன பாசிசத்தோடும் கூட்டணி கட்டிக் கொண்டு நாற்காலி சுகம் தேடிச் சீரழிந்து விட்டன.
பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, தனது பேச்சாலும் எழுத்தாலும் இன உணர்வை, மொழியுணர்வை ஊட்டி, கற்பனையான இலட்சியத்துக்கு மாயக் கவர்ச்சியூட்டினார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க தொடர்ச்சியான போராட்டத்தையோ, அதற்கான அமைப்பையோ அவர் கட்டியமைக்க முயற்சிக்கவேயில்லை. காங்கிரசை வீழ்த்தவிட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை அவர் வழிநடத்தினார்.
கொள்கை இலட்சியமற்ற பிழைப்புவாதமும் கவர்ச்சிவாதமுமே அவரது சித்தாந்தம். துரோகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நாக்கைச் சுழற்றி நியாயப்படுத்தும் இப்பிழைப்புவாதம், தி.மு.க.வை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் கவ்வியிருப்பதோடு, அரசியல் அரங்கில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய நச்சு மரமாக ஓங்கி நிற்கிறது. எல்லா வண்ணப் பிழைப்புவாதத்தோடும் எல்லாவகை கவர்ச்சிவாதத்தோடும் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் புதிய சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்தவர் என்பதாலேயே, எல்லா பிழைப்புவாதிகளும் அண்ணாதுரையை தமது மூலவராக வணங்கித் துதிபாடுகின்றனர்.
-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2008
அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை
சாதி ஒழிக்கப்படும் வரை…………தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.
வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
“ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திரு’ன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.
நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போ’னு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லி’ கடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.
மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.
நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.
சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். “முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.
எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்” என்றார் பாண்டி படபடப்போடு.
லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.
ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை” என்கிறார் அந்தச் சமூக சேவகி.
வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி ‘அமைதி’கமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க” என விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26
-
Archives
- October 2009 (1)
- September 2009 (11)
- August 2009 (4)
- July 2009 (2)
- June 2009 (1)
- May 2009 (1)
- April 2009 (3)
- March 2009 (10)
- February 2009 (1)
- January 2009 (7)
- December 2008 (3)
- November 2008 (20)
-
Categories
- அ மார்க்ஸ்
- அண்ணா
- அப்பா
- அமீர்
- அம்பேத்கர்
- அல்லா
- இந்தியா
- இந்து மதம்
- இனப்படுகொலை
- இனவெறி
- இலங்கை
- இழிவு
- இஸ்லாம்
- ஈழம்
- உலகத்தமிழ்
- எண்ணம்
- எம்.ஜி.ஆர்
- கடவுள்
- கடவுள் கற்பனை
- கம்யூனிசம்
- கருணாநிதி
- கர்த்தர்
- கலைஞர்
- கவிஞர்
- கவிதை
- காங்கிரஸ்
- காசுமீர்
- காதல்
- கிருத்துவம்
- கீற்று
- குடியரசு
- குண்டு வெடிப்பு
- சட்டக்கல்லூரி
- சாதி
- சிரிப்பு
- சீமான்
- சு சாமி
- சே
- ஜெயலலிதா
- டக்ளஸ் தேவானந்தா
- தமிழ்
- திருமணம்
- திருமா
- தீபாவளி
- தீவிரவாதம்
- நகைச்சுவை
- நையாண்டி
- பக்தி
- பன்றி காய்ச்சல்
- பாடல்
- பாரதிதாசன்
- பார்ப்பானியம்
- பிரபாகரன்
- புதிய ஜனநாயகம்
- புலிகள்
- பெரியார்
- போர் நிறுத்தம்
- மகிழ்நன்
- மத(ல)ம்
- மதம்
- மனிதம்
- மரணம்
- மாநாடு
- மாவீரர்கள்
- மிரட்டல்
- மூடநம்பிக்கை
- மொழி
- ரஜினி
- ரா(RAW)
- ராஜபக்சே
- ராஜிவ்
- ராமேஸ்வரம்
- லொள்ளு சபா
- விடுதலை
- விழித்தெழு
- Periyar
- Uncategorized
-
RSS
Entries RSS
Comments RSS